செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Wednesday 27 March 2013

1. அனிச்சம் - ANICHAM

சங்க இலக்கியத் தாவரங்கள்
                                                           அனிச்சம் -ANICHAM

                                                             Exacum pedunculatum

அனிச்ச மலர் மோப்பக் குழையுமா?
செடிகளின் இலைகளைத் தொட்டாலும், காற்றடித்தாலும் சுருங்கும் (தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மூடும்) தன்மை கொண்ட தொட்டால்சுருங்கியைத்(Mimosa pudica) தற்போது காணமுடிகிறது. ஆனால் விருந்தினரிடம் முகம் கோணாமல் இருக்க உதாரணமாகக் கூறுமிடத்து, முகர்ந்தால் வாடும் மலராகத் திருவள்ளுவரால் கூறப்பட்டுள்ள அனிச்சமலரை இன்று காணமுடியாத நிலையில், அனிச்சத்தைப் பற்றிப் பல்வேறு தமிழ் அறிஞர்களும் தாவரவியல் ஆய்வாளர்களும் அதன் தாவரவியல் பெயர்களைக் கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவாறு தந்துள்ளனார்.
1. Anagallis arvensis
2. Impatiens balsamina
3. Lagerstroemia speciosa
4. Rhinacanthus nasutus

1 Anagallis arvensis:இந்தச்செடி சிறிய மெல்லிய தண்டுகளுடையது,பொதுவாக தரிசு நிலங்களில் வளரும் இயல்புடையது. வளரும் இடங்களைப் பொருத்து அதிகம் வேறுபாடானவையாக இருக்கும். மலர்கள் கருநீலத்தில் காணப்படும். புல்லிவட்டத்தின் அடிப்பகுதி சிவப்பு நிறமாகக் காணப்படும். மத்தியதரைக்கடல் பகுதி, மேற்கு ஐரோப்பா, குளிர்மண்டலப் பகுதி ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படும். மேலும் வெப்பமண்டலப் பகுதிகளையும், மலைகளின் மேல்மட்டத்தையும் வளரிடமாகக் கொண்டது எனத் தகவல்கள் கூறுகின்றன.
2.Impatiens balsamina:இந்தச்செடிகள் மிகவும் மிருதுவானது, தண்டுகள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையவை. செடியும், மலரும் பறித்தஉடனேயே வாடும் தன்மையுடையவை. பலவண்ணங்களில்அமைந்தமலர்களைஉடையஇவை அலங்காரச் செடிகளாகவளர்க்கப்படுபவையாகஉள்ளன. சூரிய ஒளிபடும் சதுப்புநிலப்பகுதிகளை வளரிடமாகக் கொண்டதுஎனவும்,இவைஇந்திய தீபகற்பம், பர்மா, சீனா போன்ற இடங்களில் காணப்படுவனவாகத் தகவல்கள் கூறுகின்றன.
3.Lagerstroemia speciosa :இது மரவகுப்பை சேர்ந்தது. இதன் மலர்கள் மிகமென்மையானவை, இளஞ்சிவப்பு (Pink) வண்ணம் கொண்டவை. இந்தியாவிலும் மலேசியாவிலும் ஆசியாவின் பெரும்பகுதிகளிலும் இம்மரங்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியை வளரிடமாகக் கொண்டதாக கூறப்படுகின்றது.
4.Rhinacanthus nasutus :இந்தத் தாவரம் செடிவகையைச் சேர்ந்தது. இதன்மிருதுவான மலர்கள் வெண்ணிறமானவை,. மலைச்சரிவு பகுதிகளையும் நீர்சூழ்ந்த நிலப்பகுதிகளையும்வளரிடமாகக் கொண்டது.ந்தத்தாவரம் இந்திய தீபகற்பப் பகுதிகளில்காணப்படுகின்றன.
வற்றில் Anagallis, Impatiensசெடிள்மலரைப் பறித்தாலோ, செடியை பிடுங்கினலோ வாடும் தன்மை கொண்டவை. இவைகளில்சதுப்புநிலத்தில் வாழக்கூடியImpatiens(காசித்தும்பை)செடி உடனே வாடும் தன்மை கொண்டது.மேலும் மலர்கள் பல வண்ணங்களைக் கொண்டதாயிருக்கும். காசித் தும்பையின் தண்டு மிகவும் மென்மையானது, இத்தண்டைத் சாயம்கலந்த நீர் உள்ள பாத்திரத்தில் வைத்தால், அந்தச் சாயம் தண்டுப்பகுதியில் செல்வது மிக நன்றாகத் தெரியும். இச்செடியின் தண்டும், மலரும் மென்மைக்கு மிகப் பொருந்துவனவாக உள்ளது. 
மேற்கூறியவை ல்லாமல் வேறு சில தாவரங்களையும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சூரிய ஒளி படும்போதும், நிழல் படும்போதும் இலைகள் சுருங்கும் தன்மை கொண்ட Biophytumsen sitivumதாவரத்தையும்ஆராய வேண்டிய நிலை உள்ளது. பூவின் நிறம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமானது. மேலும் இவை சாலையோரங்கள், மலைப்பகுதிகள் மற்றும் காடுகளை வளரிடமாகக் கொண்டவை.
Evolvulus alsinoides:விஷ்ணுக்கிரந்தியின் மலர்களுக்குச் சங்கஇலக்கியங்களில் கூறும் அனைத்து இயல்புகளும் பொருந்தி வருகின்றன.. சூரியன் உதித்த சில மணி நேரங்களில் இச்செடியின் மலர்கள் வாடிவிடும். இச்செடியின் மலர்கள் மிகச் சிறியனவாக இருப்பதாலும் எடுத்து முகரக் கூடியனவாக இல்லாததாலும், வறண்ட நிலப்பகுதிகளை வளரக் கூடியதாக
இருப்பதாலும் இதை அனிச்சமாகக் கொள்வதைத் தவிர்க்க வேண்டியதாக உள்ளது.
Exacum pedunculatum இத்தாவரம் சிறுசெடி வகையை சேர்ந்தது. வெளிர்நீலமலர்கள் மெல்லிய தன்மை கொண்டவை. சமவெளிகள், ஈரமான நிலப்பகுதிகள்,நீரோடைகளின் கரைகள்,தரிசு நிலங்களில் வளரிடமாகக்
கொண்டவை.இந்தியா,மாலேசியாஆகிய நாடுகளில்இச்செடிகாணப்படுகின்றது.இவை அனைத்து செடிகளும் பிடிங்கியவுடன் வாடும் தன்மைக் கொண்டதே தவிற, மலர்கள் உடனே வாடும் தன்மை கொண்டவை அல்ல.
மோப்பக்குழையும் என்பது மிகைபடுத்தப்பட்டதா?
மலர்பறித்தவுடன் வாடும் என்பதற்கு வெளிவெப்பத்தால் வாடும் என்பதைப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம். முகரும்போது மூச்சுக்காற்றின் வெப்பத்தால் வாடும் தன்மை கொண்டது மலர் எனவும் எடுத்துக்கொள்ளலாம். பறித்த சிறிதுநேரத்தில் வாடும் தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன்மிகைப்டுத்தமாகமுகர்ந்தால்வாடும்என்பது கூறப்பட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.
தற்போது காணக் கிடைக்காத அன்னப்பறவையின் சிறந்த குணமாகக் கூறுமிடத்துபாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால் அது தண்ணீரை ஒதுக்கிவிட்டுப்பாலை மட்டுமே அருந்தும் எனக் கூறப்பட்டதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் இது எப்படிச்  சாத்தியமானது இல்லையோ அது போல முகர்ந்தால் வாடும் என்பதையும் மிகைப்படுத்தமாக எடுத்துக்கொள்ளலாம்.
பினிக்ஸ் பறவை எரிக்கப்பட்ட அதன் சாம்பலில் இருந்து மீளவும் உயிர் பெற்று எழும் என்பது சாத்தியமானதாக இல்லை. இது எப்படி மிகையானதாகக் கூறப்பட்டுள்ளதோ அதேபோல் அனிச்சமலரை மோப்பக்குழையும் எனக் கூறியுள்ளதும் மிகைபடக் கூறலாக இருக்க வாய்ப்புள்ளது. அல்லது மோப்ப என்பதற்குத் தமிழில் வேறு பொருள் இருக்கலாமா என்பதையும் ஆராயவேண்டியதாயுள்ளது.
இருப்பினும் இலக்கியங்களில் அனிச்சத்திற்காக கையாளப்பட்டுள்ள அடைமொழிகளைப் பார்க்குமிடத்து
*        மோப்பக்குழையும் அனிச்சம் திருக்குறள்
*        நன்னீரை வாழி அனிச்சம் – திருக்குறள்
*        அனிச்சப்பூக் கால்களையாள் திருக்குறள்
*        அனிச்ச மாமலர் – கந்தபுராணம்
*        அனிச்சம் குழைத்து - கல்லாடம்
*        கொய்யல் குழைஇ அனிச்சமும் – பெருங்காதை
*        வரிஇதழ் அனிச்சம் – பெருங்காதை
*        அணிநிற அனிச்சம் – பெருங்காதை
*        பஞ்சி அடர் அனிச்சம் – சீவகசிந்தாமணி
*        அலர் தலை அனிச்சம் - சீவகசிந்தாமணி
*        அம் மெல் அனிச்சம் - சீவகசிந்தாமணி
*        ஆவா அனிச்சம் – திருவருட்பா
*        பஞ்சியும் அனிச்சம் – மும்மணிக்கோவை

என்ற அனிச்சத்திற்கான அடைமொழிகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. காலத்தால் முந்திய திருக்குறளில் கூறப்பட்டமோப்பக்குழையும் அனிச்சம் என்பதைத் தவிர்த்து மற்ற அடைமொழிகளைப் பார்க்குமிடத்து, வள்ளுவர் கூறிய நன்னீரை வாழி அனிச்சம்என்பதற்கு நல்ல நீரோடைகளை ஒட்டிவாழும் அனிச்சம்எனப் பொருள் கொள்ளுதலும், மேலும் அனிச்சப்பூக் கால்களையாள்எனக் குறிப்பிடுவதன் மூலம் அனிச்சம் மலர்க் காம்பு நீண்டு இருக்கும் என்பதை உணர்த்துகின்றது.இந்த அடைமொழிகளின் அடிப்படையில் மேற்கூறியவற்றில் Exacumஎன்றதாவரம்மட்டுமே வளரிடத்தின் அடிப்படை மற்றும் நீண்ட காம்புடைய மலர் என்பதிலும் தனித்து நிற்கின்றது. இத்துடன்அணிநிறம் என்ற அடைமொழி நீலநிறத்தை உணர்த்துவதாகஇருப்பதையும்கருத்தில்கொள்ளவேண்டியுள்ளது.
காலத்தால் முந்தையதாக பட்டியலிடப்பட்டுள்ள சங்கபாடல்களில்கலித்தொகையில்அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம் என்றும், பெரும்பான்மையான தாவரங்களை அடைமொழியுடன் அறிமுகம் செய்துள்ள குறிஞ்சிப்பாட்டில்ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் எனவும் அடைமொழி இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள், மோப்பக்குழையும் அனிச்சம் எனவும், நன்னீரை வாழி அனிச்சம் எனவும்,அனிச்சப்பூக் கால்களையாள்எனவும், குறிப்பிடுகின்றது. மற்றைய பக்திஇலக்கியங்களில் திருக்குறளின் இந்தக் கருத்தைச் சார்ந்தே அனிச்சம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தாவரங்களின் இருப்பிடங்களைச் சார்ந்து சிறப்பாகக் கூறும் பெருங்காதையில்வரிஇதழ் அனிச்சம், அணிநிற அனிச்சம், கொய்யில் குழைஇ அனிச்சம் என்றெல்லாம் அனிச்சம் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் நல்ல நீர்நிலைகளில் வாழும் என்பதையும், மலர்க் காம்பு நீண்டு இருக்கும் என்பதையும் இணைத்துப் பார்க்குமிடத்து Exacumpedunculatumஎன்ற தாவரமே அனிச்சம் மலராக இருக்கலாம் என்ற கருத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன்.
அனிச்சத்திற்கான தாவர வகைப்பாடு
Exacum pedunculatum- மோப்பக்குழையும் அனிச்சம்
Classification
Name
வகைப்பாடு
தாவரத் தகவல்மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Family
GENTIANACEAE Juss.
குடி
சிரட்டைக் குடி
Genus
ExacumLinn.
Old Genus - Sebaea
பிறவி
Species epithet
pedunculatumL.
பெயர் வழி
நாற்கோணம்/ஒருபூந்தண்டுக்கொண்டது
Botanical Name
Exacum pedunculatum L.
தாவரவியல் பெயர்
மோப்பக்குழையும்அனிச்சமதிருவள்ளுவர்
Synonym
8 - Synonyms
Exacum carinatumRoxb.
Sebaea sulcatum(Roxb.) Spreng.
வேறு பெயர்கள்

Habit
Herb
வளரியல்பு
சிறு செடி

தாவரத்தின் பண்புகள்
வளரியல்பு: பருவவாழ் சிறுசெடி. சுமார் 15 முதல் 30 செ.மீ., உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு : நாற்கோணங்களைக் கொண்டது.
இலைகள்: குறுக்குமறுக்கானவை, தலைகீழ் ஈட்டி வடிவானவை, சுமார் 3 * 1.5 செ.மீ., பரப்பளவு உடையவை.
மஞ்சரி: இரண்டிரண்டாகக் கிளைத்த நுனிவளராப் பூந்துணர்கள் (Cyme) சுமார் 3 செ.மீ., வரையிலான நீளமுடையவை.
மலர்கள்: புல்லி-இதழ்கள் மேற்புறம் இறகு போன்ற வடிவுடையவை.
அல்லிகள்: நீலம் மற்றும் இளம் ஊதா நிறங்களில் காணப்படும். இவை கிட்டத்தட்ட 1.5 செ.மீ., நீளமுடையவை.
சூல்முடி: கிட்டத்தட்ட உருண்டை வடிவுடையவை.
கனி: வெடி உலர்கனி (Capsule), ஒரு பட்டாணியின் உருவத்தை ஒத்தது.
விதை: மிகச்சிறியது, வட்ட வடிவானது.
பூக்கும் பருவம்: ஜனவரி முதல் மார்ச் வரை.
காய்க்கும் பருவம்: பிப்ரவரி.
வாழ்விடம்: சமவெளிகள், ஈரமான நிலங்கள், நீரோடைகளின் கரைகள், தரிசுநிலங்கள். கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரமான பகுதிகள்.
பரவியிருக்குமிடம்: இந்தியா, இலங்கை போன்ற இடங்கள்.
தமிழ் நூல்களில் இடம்பெறும் பாடலடிகள்

சங்க இலக்கியம்
         எட்டுத்தொகை
கலித்தொகை
அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்
புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின்
இன்று நன்று, என்னை அணி  - 91 : 1-5
பத்துப்பாட்டு

குறிஞ்சிப் பாட்டு
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, . 62-64.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்
மோப்பக் குழையும் அனிச்சம்முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து - இல்லறவியல் - 90
நன்னீரை வாழி அனிச்சமேநின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்  - களவியல் - 1111
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறைகளவியல் - 1115
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்    -1120
                                                    - களவியல்
இதிகாசம்
கம்பராமாயணம்
ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள்தன் பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, 'சால
நொய்யவே; நொய்ய' என்றோ, பலபட நுவல்வது? அம்மா!  - 14- 22.
                                                                         கோலம் காண் படலம் - பால காண்டம்.

காப்பியங்கள்
              ஐம்பெருங்காப்பியம்
               சீவகசிந்தாமணி
குஞ்சி மேல் அனிச்ச மலர்கூட்டு உணும்
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134 
                                                        - நகர் வளம்

கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
நங்கை நலம் தொலைந்ததே- 231
                                                                        நாமகள் இலம்பகம்.

பஞ்சி அடர் அனிச்சம்நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்துயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே- 341
                                                                       நாமகள் இலம்பகம்.1

அம் மலர் அனிச்சத்துஅம் போது
அல்லியோடு அணியின் நொந்து
    விம் உறு நுசுப்பு நைய
வீற்று இருந்து அணங்கு சேர்ந்த
    வெம் முலைப் பரவை அல்குல்
மிடை மணிக் கலாபம் வேய்த் தோள்
    செம் மலர்த் திருவின் சாயல்
தேமொழி தத்தை என்பாள்  -606
                                                                  காந்தருவ தத்தையார் இலம்பகம்.3

விலை வரம்பு அறிதல் இல்லா
    வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்துஅம் போது
    ஐம் முழ அகலம் ஆகப்
பல படப் பரப்பிப் பாவை
    மெல் அடிப் பரிவு தீர
நில வரை தன் அனாரை
    நிதியினால் வறுமை செய்தான் -617
                                                               காந்தருவ தத்தையார் இலம்பகம்.3

அனிச்சப் பூங் கோதை சூட்டின்
    அம்மனையோ என்று அஞ்சிப்
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை
    ஒருத்தி நாம் பலர் என்று எண்ணித்
துனித்து நீர் துளங்கல் வேண்டாம்
    தூமணிச் சிவிறி நீர் தூய்த்
தனிக் கயத்து உழக்கி வென்றீர்
    தையலைச் சார்மின் என்றான்-745
                                                                       காந்தருவ தத்தையார் இலம்பகம். 3

அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும்
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் இலவப் பூம் போது அன நின் அடி போற்றி
இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள்- 2454
                                                                            இலக்கணையார் இலம்பகம். 12

விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
அம் மலர் உரோமப் பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
செம் மலர்த் திருவின் அன்னார் சிகழிகைச் சேர்த்தினாரே - 2667 -
                                                                                          முத்தி இலம்பகம் 13.

இவ்வாறு எங்கும் விளையாடி
    இளையான் மார்பின் நலம் பருகிச்
செவ்வாய் விளர்த்துத் தோள் மெலிந்து
    செய்ய முலையின் முகம் கருகி
அவ்வாய் வயிறு கால் வீங்கி
    அனிச்ச மலரும்பொறை ஆகி
ஒவ்வாப் பஞ்சி மெல் அணை மேல்
    அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார். - 2701
                                                               முத்தி இலம்பகம் 13.

அனிச்சத்து அம்போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி
இனிச் செத்தாம் பிறந்த போழ்தே என்று நாம் இதனை எண்ணித்
தனிச் சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கிப்
பனித்தும் என்று உற்ற போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்.2939
                                                                                                 முத்தி இலம்பகம் 13.
ஐஞ்சிறுங் காப்பியம்
சூளாமணி

அடுக்கிய வனிச்சப் பூவினமளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளைக்கையால் வளைத்த மார்பில்
றொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டான். -558.
                                                                                     தோலாமொழித் தேவர்
பக்தி இலக்கியம்
கந்தபுராணம்
ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்ச மாமலரும்அன்னத்
தூவியும் மிதிக்கில் சேந்து துளங்கு உறும் அடிகள் என்றால்
நாவி அம் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்
பூவதோ அது பூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான்.1844 - 
                                                                மாயைப் படலம் - அசுர காண்டம்.
கல்லாடம்
இலவு அலர் தூற்றி, அனிச்சம்குழைத்து,
தாமரை குவித்த காமர் சேவடித்
தருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான் அதில் தோன்றாத,
கிளை முள் செறித்த வேலிஅம் படப்பைப்
படர் காய்க்கு அணைந்த புன் கூழைஅம் குறு நரி
உடையோர் திமிர்ப்ப, வரும் உயிர்ப்பு ஒடுக்கி
உயிர் பிரிவுற்றமை காட்டி, அவர் நீங்க
ஓட்டம் கொண்டன கடுக்கும்
நாட்டவர் தடைய, மற்று, உதிர்த்து நடந்ததுவே!–94–4-13 
                                                             பாணனொடு வெகுளுதல்

திருப்புகழ்
அனிச்சங் கார்முகம்வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் - 29 – 
                                                                               திருச்செந்தூர்.

பெருங்கதை
புன்கு நாவலும் புரள வெற்றிக்
கொங்கார் கோடலொடு கொய்யல் குழைஇ              
அனிச்சமும் அசோகமு அடர வலைத்துப்       
பனிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து          
வள்ளியும் மரலும் தன்வழி வணக்கிப்          
புள்ளி மானும் புல்வாய்த் தொகுதியும்    - 551. 
                                                        உஞ்சைக்காண்டம் - 51 - நருமதை கடந்தது.

அனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்
அந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்
சுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்
வித்தகர் கொடுத்த பித்திகைப் பிணையலும்
மத்தநல் யானை மதமும் நானமும்-   71-75  - 1. 
                                                                   உஞ்சைக்காண்டம்  -42 - நங்கை நீராடியது.

மகிழும் பிண்டியும் வரிஇதழ் அனிச்சமும்       
வேங்கையும் ஆவும் விளவும் வேயும்          
கோங்கமும் குரவும் கொடிக்குருக் கத்தியும்             
நறையும் நந்தியும் அறைபயில் அகிலும்- - 2. 
                                                            இலாவாண காண்டம் 12 – 15மாசன மகிழ்ந்தது
                             

சேட்படு விசும்பில் சென்றவன் அவ்வழிப்
பொய்ப்படு குருசில் பொலிவொடு பட்டென      
முயக்கமைவு இல்லா நயப்புறு புணர்ச்சியுள்
அணிநிற அனிச்சம்பிணியவிழ்ந்து அலர்ந்த
அந்தன் நறுமலர் அயர்ப்பில் தாங்கும். -131 -135 - 5. 
                                                                               நரவாண காண்டம் 1.வயாக் கேட்டது


பன்னிரு திருமுறை
திருமுறை 8 (திருக்கோவையார்)
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் 
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த  
கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்  
இனிச் சந்த மேகலை யாட்(கு)என்கொ லாம்புகுந்(து) எய்துவதே - 18 -  211

தாமே தமக்(கு)ஒப்பு மற்றில் லவர்தில்லைத் தண்அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங் காய் எரியும்  
தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படியாய்    
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.- 35-228

திருவருட்பா

வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே. - 1406. 21

ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.  - 1430.-45 
    
                                                                            இரண்டாம் திருமுறை     -வள்ளலார்

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

மடவரன் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும்(அ)னிச்சமு மெஞ்ச வெஞ்சாத்
திருவொடும் பொலியு மொருபாற் றிருவடி  - 13-16


               பண்ருட்டி
4 comments:

 1. ஆய்வுக்கு உதவும் கட்டுரை

  அன்பழகன்

  ReplyDelete
 2. அருமையான முயற்சி மிக சுவையான செய்திகள் வாழ்க தமிழ் புகழ் காக்கும் உங்களை போன்றோர் இருக்கையில் என் தமிழ் வாழும்

  ReplyDelete
 3. அண்ணன் அவர்களே ,அன்னப் பறவையைப் பற்றிக் கூறும் போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று எல்லோருமே கூறுகின்றனர். இக்கட்டுரையில் நீங்களும் அப்படியே குறிப்பிட்டுள்ளீர்கள். பாலில் எலுமிச்சை சாறு மற்றும் ,புளிப்பு சுவையைக் கொடுக்கக் கூடிய அமிலம் பட்டால்(எ -டு--வினிகர் ) பால் திரிந்து தண்ணீர் தனியாக வருகிறதே , அதைப் போல அன்னப் பறவையின் உமிழ் நீரில் அந்த வகையான அமிலம் இருந்திருந்தால் பாலில் தண்ணீரைப் பிரிப்பது சாத்தியமானது தானே? இதைப் பற்றி நேரில் பேசுவோம். நன்றி.

  ReplyDelete