செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Tuesday 2 April 2013

அசோகம், பிண்டி, செயலை மூன்றும் ஒன்றா?


அசோகம், பிண்டி, செயலை இம் மூன்றும் ஒன்றா?

அசோகு
                 பிண்டி
     செயலை
     அசோகு, பிண்டி, செயலை இம்மூன்றும் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஒன்றென கொண்டனர். ஆனால் இம்மூன்றும் ஒரே தாவரம் அல்ல.
    அசோகு சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகைத் தொகுப்பில் கலித்தொகையில் குறிஞ்சிக் கலிபாடலில் கபிலரால் மட்டுமே 
பொழி பெயல் வண்மையான் அசோகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அசோகம் இளமாவின் தளிர் போன்றது என்றுமட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது
     
பிண்டி மலர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில், பல்பூம் பிண்டி, சாய்இழை பிண்டி, ஒண் பூம் பிண்டி, எரிநிற நீள் பிண்டி, கடி மலர்ப் பிண்டி, ஒண் பூம் பிண்டி, என்று மலர்களை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.
     
செயலை பற்றி சங்க இலக்கியத்தில் கூறும்போது பூக்களைப் பற்றிக் கூறாமல் வெறும் இளந்தளிர்களை மட்டுமேக் குறப்பட்டுள்ளது. அவை செவ்வரைச் செயலை, ஒண்தளிர்ச் செயலை, அம்தளிர்ச் செயலை, அழல்ஏர் செயலை, அம்குழைச் செயலை, ஒலிக்குழைச் செயலை. ஆகையால் மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் எனக்கருத இடமுண்டு.

1. அசோகு

இலக்கியங்கள்
     சங்க இலக்கியம்
                                     எட்டுத்தொகை

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலை
சென்றாள் அறிவைக் கவர்ந்து! 57(21):12,13
                                              - கலித்தொகை - குறிஞ்சிக் கலி - கபிலர்.
இலக்கண நூல்கள்
                               நன்னூல்.
               .
பூமலி அசோகின்புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே 56
                                                              - எழுத்ததிகாரம் - கடவுள் வணக்கம்
                                                எழுத்தியல்
                                           
இதிகாசங்கள்
           கம்பராமாயணம்
 ‘அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம்,
பொருந்திய களி வண்டில் பொதிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய். - 2095:8.
- அயோத்தியா காண்டம் - வனம் புகு படலம்.
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள் மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறுமலர் யாழில்
சுரும்பு பாண் செயத், தோகை நின்று ஆடுவ சோலை      - 541:64.
- விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு.
- அகலிகைப் படலம், பாலகாண்டம்.
ஐம்பெருங் காப்பியம்
                            சிலப்பதிகாரம்
செந்தாமரை விரிய தேமாம் கொழுந்து ஒழுக
மைந்தார் அசோகம்மடல்அவிழ-கொந்து ஆர்
இளவேனில் வந்ததால் என் ஆம்கொல் இன்று
வளவேல் நல் கண்ணி மனம்.
- புகார்க்காண்டம்.
- வேனில் காதை.
- இளங்கோவடிகள்

                           மணிமேகலை
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்-3:160-165
                                                      -மலர்வனம் புக்க காதை..
   ஐஞ்சிறு காப்பியம்
                                  சூளாமணி
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகை  க்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்
- தூதுவிடு சருக்கம்

            உதயன குமார காவியம்

பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.
- கடவுள் வாழ்த்து - உஞ்சைக் காண்டம்
பக்தி இலக்கியம்
               கந்தபுராணம்
சந்தம் அகில் பலவும் தேமாச் சரளமே திலகம் தேக்குக்
கொந்து அவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்
நந்திய கதலி கன்னல் நாகு இளம் பூகம் வன்னி
முந்து உயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி-2928
- அசுர காண்டம் - இந்திரன் கரந்து உறைபடலம்.
            

              கல்லாடம்
செம்பஞ்சு, அரத்தம், திலகம், உலோத்திரம்,
முயலின் சோரி, சிந்துரம், குன்றி,   கவிர் அலர்
என்னக் கவர் நிறம் எட்டும
குருவிந் தத்தில் குறித்தன நிறமும
அசோகப் பல்லவம், அலரி, செம்பஞ்சு -31-35  
- மெலிவு கண்டு செவிலி கூறல

               திருவிளையாடற் புராணம்
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார். -716:117.
- மதுரைக் காண்டம் - திருமணப் படலம்.
                       
களி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம்
தளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க
ஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்கு அந்த
மிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும் எல்லை. - 1234:40.
- மதுரைக் காண்டம் - மாணிக்கம் விற்ற படலம்.

                பெருங்காதை
இமையோர் இறைவனை எதிர்கொண் டோம்பும்
அமையா தீட்டிய அருந்தவ முனிவரின்
வியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்(டு)
அணித்தகு பள்ளி அசோகத் தணிநிழல்
மணித்தார் மார்பனை மணன்மிசை அடுத்த  - 35
 - இலாவாண காண்டம் - 13. குறிக்கோள் கேட்டது

திருவாய்மொழி நூற்றந்தாதி
வளைத்துவைத் தேனினிப் போகலொட் டேனுன்ற னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின்திரு வானைகண் டாய்நீ யொருவர்க்கும் மெய்யன்னல்லை
அளித்தெங்கும் நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்த முடைத்திரு மாலிருஞ் சோலை யெந்தாய்!
  - பெரியாழ்வார் பாடிய திருமொழி.

              பன்னிரு திருமுறை
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)
பள்ளிகள் மேலும் மாடு பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும் உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும் கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில் பூசலிட் டழிவு சாற்றும்.
2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

சீர்மலி அசோகு தன்கீழ் இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும் எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று ரைப்பார்
12-ம் திருமுறை - திருத்தொண்டர் புராணம்(சேக்கிழார்)

             திருநெறி

வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து)
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினோடு பீலிமேல்
நேச மாயவை தரித்துள்ளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம்.
- பரபக்கம் - நிகண்டவாதி மதம்
- சிவஞான சித்தியார்
             வில்லி பாரதம்
பைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை மீளச்
செந் தழல் ஆக்கி அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ
- சம்பவச் சருக்கம்

கோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி உற்று எரிகின்ற
தீத் திறங்கள் செங் காந்தளும் அசோகமும் செங் குறிஞ்சியும் சேரப்
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற
பார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த தாதுவும் போன்ற.
 - காண்டவ தகனச் சருக்கம்
           நிகண்டுகள்
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. - 141
  - வட மலை நிகண்டு.

               விருட்ச ஆயுர்வேதம்
முருங்கை, வில்வம், ஏழிலைப்பாலை, நொச்சி,
அசோகம், வன்னி, கரிஆல்
கார்கந்து, மகிழம், வேம்பு, தேக்கு ஆகியவை
வறண்ட நிலத்தில் வளர்வன.   - 42:1-4
 - 4. நிலமும் மண்ணும்சுரபாலர்.

பாலினி (வெற்றிலைப் பட்டை) அசோகம்,
புன்னை, வாகை, வேம்புஎன்ற ஐந்தும்
தெய்வீகமானவை; நோய் தீர்ப்பவை;
உயிர் காப்பவை; அவற்றை முதலில் நடுக.   - 92:1-4
- 6. மரநடவும் வன அமைப்பு நுட்பங்களும்.
 - சுரபாலர்.

அசோகைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்

மடல்அவிழ் அசோகம்     இளங்கோவடிகள்
செறிஇதழ் அசோகம்       கம்பர்
கொழுங்கால் அசோகு     சீத்தலைச் சாத்தனார்
கோழ்இணர் அசோகம்     பரஞ்சோதி முனிவர்
கொந்துஅவிழ் அசோகு    கச்சியப்பர்
வாசமாமலர் அசோகு      சிவஞான சித்தியார்
ஒள்ளிதழ் அசோகம்       சேக்கிழார்
பூநிறை அசோகம்         காண்டியர்

அசோகின் பூவைப் பற்றிக் கூறுமிடத்து

பூநிறை                           :  பூக்கள் நிறைந்திருக்கின்ற
வாச மாமலர்               :  வாசனையுடைய மலர்
கொத்து அவிழ்             :  கொத்தான மலர்கள்
மடல் அவிழ்                   :  இதழ் விரிந்து
ஒள் இதழ்                        :  ஒளி பொருந்திய வண்ண மலர்

இலைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் மலர்களை பற்றி மட்டுமே கூறப்படும் விளக்கம் எல்லாம்Saraca asoca என்ற தாவரத்திற்கு பொருத்தமாக உள்ளது.

அசோக மலர்


                                                                     Saraca asoca

தாவரவிளக்கம்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Saraca Linn.
Old Genus - Jonesia
பிறவி
அசோகு
Species epithet
asoca (Roxb.) Wilde
பெயர் வழி
நாட்டு
Botanical Name
Saraca asoca (Roxb.) Wilde
தாவரவியல் பெயர்
பூநிறை அசோகம் காண்டியர்
Synonym
4 - Synonyms
Jonesia asoca Roxb.
Jonesia confusa Hassk.
Jonesia pinnata Willd.
Saraca confusa (Hassk.) Backer
வேறு பெயர்கள்

Habit
Tree
வளரியல்பு
மரம்

2. பிண்டி
இதிகாசங்கள்
                              கம்பராமாயணம்

'ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங்  கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? -  4598:46.
- கிட்கிந்தா காண்டம். - நாட விட்ட படலம்.

பின்னங்கள் உகிரிற் செய்து பிண்டி அம் தளிர் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பித்,     தேன் மலர் கொய்கின்றாரும் :
வன்னங்கள் பலவும் தோன்ற      மணி ஒளிர் மலையில் நில்லா
அன்னங்கள் புகுந்த என்ன,      அகன் சுனை குடைகின்றாரும்.    - 951:54
- பால காண்டம். - வரைக்காட்சிப் படலம்.

ஐம்பெருங் காப்பியம்
                 சிலப்பதிகாரம்
காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் மேல் இருந்து அருளி  -  15:151-154.
 - மதுரைக்காண்டம் -  அடைக்கலக் காதை.

கோதை தாழ்பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதி இல் தோற்றத்து அறிவினை வணங்கிக் -11:3,4.
- மதுரைக்காண்டம் -                                          காடுகாண் காதை.

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர் அணி விழவினம் நெடும்தேர் விழவினும்  -  10:21,22.
-  புகார்க்காண்டம்.  - நாடுகாண் காதை.

சீவகசிந்தாமணி
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே  - 149.
 
- நாமகள் இலம்பகம்  - கோயிற் சிறப்பு.

தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே  - 223.
  
- சச்சந்தன் வரலாறு  
- நாமகள் இலம்பகம்.
ஐஞ்சிறு காப்பியம்
                     சூளாமணி
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
            இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று  திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே 
                               கைகளும் இடைகளும்

நீலகேசி
அரிய வாயின செய்திட் டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப் பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டி மரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய் பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.  - 156

 அடைவிலா யோனி யானா யாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான மெய்திக் கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப் பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ னென்றாற் குற்றமிங் கென்னை யென்றாள்   - 445.  

கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை
யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை
 பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற்
கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ   - 590
.
யசோதர காவியம்
இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி  வண்டா
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.   - 221
 - நான்காஞ் சருக்கம்

உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.   – 235
- நான்காஞ் சருக்கம்

உதயன குமார காவியம்
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே.  - 1
 - உஞ்சைக் காண்டம்  - கடவுள் வாழ்த்து.

நாககுமார காவியம்
மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும் எந்தம்
இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே    - காப்பு.

முதல் சருக்கம்.
செந்தளிர்ப் பிண்டியின் கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.
           தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்    - 1

பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு  மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்  - 16

வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியி ன்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்
சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்  - 43

சங்க இலக்கியம்
பத்துப்பாட்டு
                குறிஞ்சிப் பாட்டு

பைங் காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ செந் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய  -117-122.
   - கபிலர். .

அடும்பு, அமர்ஆத்தி, நெடுங்கொடி அவரை
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், 87-89.
  - கபிலர்.
                  திருமுருகாற்றுப்படை
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்பத் திண் காழ்-1:31,32.
                                                                           - நக்கீரர்..
                    மதுரைக்காஞ்சி 
சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன  - 700-703.
 - மாங்குடி மருதனார். .

எட்டுத்தொகை
                          பரிபாடல் 

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்- 11:94-98.
 - நல்லந்துவனார்.

கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி
அடிமேல் அடிமேல் ஒதுங்கி தொடி முன்கைக் 12:88-90.
 -  நல்வழுதியார்.
               பரிபாடல் திரட்டு
ஒருசார்அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி
மணி நிறம் கொண்ட மலை  - 1:7-9.
 - திருமால்.

 பக்தி இலக்கியம்
   கந்தபுராணம்
சூலம் திகிரிப் படை தோமரம் துய்ய பிண்டி
பாலம் சுடர் வேல் எழு நாஞ்சில் பகழி தண்டம்
ஆலம் கணையங் குலிச ஆயுதம் ஆதி ஆக
வேலும் படைகள் பொழிந்து ஆர்த்தனர் எங்கும் ஈண்டி  - 1485
- உற்பத்தி காண்டம் - தாரகன் வதைப் படலம்

எண் தகும் சம்புடம் வேட்டிதம் விசும்பிதம் உற்புல்லம்
பிண்டிதம் பீடிதம்மே பிரேதுகை அநுபாதம் தான்
பண்டதங் கடக மத்த பத்ம வாசனம் சமூர்த்தம்
தண்டகம் லளிதம் வேணுச் சாரிதம் சமவே சன்னம்  - 8259
 - தேவ காண்டம - கந்த வெற்புறு படலம்
          
மண்டலம் புகழும் தொல்சீர் வள்ளி அம் சிலம்பின் மேல் போய்ப்
பிண்டி அம் தினையின் பைம் கூழ்ப் பெரும் புனத்து இறைவி தன்னைக்
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
பண்டு ஒரு புடையில் வைத்த பழம் பொருள் கிடைத்தவா போல்  - 10146
- தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம்
          
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு
வெள்ளறை நின்றானே! .. 1376: 5-8

பெருங்காதை
அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும்
பொருவின் னாழிகை பூணு மாறும்
செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்
சாரியை விலக்கும் வேறிரி வகையும்
இடுக்கட் போதி னேமப் பூமியுள்  - 30
                                              - உஞ்சைக்காண்டம்  - விழாக் கொண்டது

பைந்தளிர் பொதுளிய பனிமலர்க் காவிற்
செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறுந் தொடுத்த
பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர் கோத்த
பண்ணுறு பல்வினைப் பவழத் திண்மணை
ஊக்கமை யூசல் வேட்கையின் விரும்பினும  - 175
                                              - உஞ்சைக்காண்டம்  - உழைச்சன விலாவணை
  
பெருஞ்செண் பகமும் பிண்டியும்  பிரம்பும்
கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
                                          - உஞ்சைக்காண்டம்  - முல்லை நிலங் கடந்தது

கல்லிற் காட்டிய செல்லற் றூவழிப்
பிண்டி பிணங்கிப் பிலம்புக் கதுபோல்
கண்டவர்க் காயினுங் கடத்தற் காகா
அருமை யெய்திய வரிலமை யாரிடை
இறும்பம லடுக்கத் தின்றேன் கொளீஇய  - 45
                               - உஞ்சைக்காண்டம்  - முல்லை நிலங் கடந்தது
 
கோலக் கோயிலொடு குரம்பை கூடிப்
பலவு மாவு நலமா நாகமும்
மகிழும் பிண்டியும் வரியிதழ் அனிச்சமும்
வேங்கையும் ஆவும் விளவும் வேயும்  - 10-13
                                            - இலாவாண காண்டம் - மாசன மகிழ்ந்தது

செப்படர் அன்னசெங்குழைப் பிண்டிக்
கப்புடைக் கவிசினை நற்புடை நான்ற
தழைக்கயிற் றூசல் விருப்பிற் றூக்கியும்
பைங்கொடி முல்லை வெண்போது பறித்தும்
கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்  - 25-29
                                    - இலாவாண காண்டம் - உண்டாட்டு

பெருந்தண் பிண்டி பிணங்கிய நீழல்
அரும்படைத் தானை அகன்ற செவ்வியுள்
வயந்தக குமரனொடு வத்தவன் இருந்துழி  - 45 - 47
                                 - இலாவாண காண்டம் - விரிசிகை மாலைசூட்டு
  
பன்னிரு திருமுறை

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர்கள்  பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் 2
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)
               
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண வாளனே.
- 3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.
- 3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக் கென்றுபல் வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் வக்கரையே
-3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் புகவெறிகொள் சண்பைநகரே
-3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்
தகவண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற(டு) உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
-11-ம் திருமுறை - தேவாரம் (நக்கீரதேவநாயனார்)

பதினென்கீழ்க்கணக்கு
                  பழமொழி நானூறு
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.         - தற்சிறப்புப் பாயிரம்.

               கைந்நிலை
பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம். - 36
        - பாசம் பட்டு ஓடு - புல்லங்காடனார்

திணை மாலை நூற்றைம்பது
எரிநிற நீள் பிண்டி இணர் எல்லம்
வரிநிற நீள் வண்டர் பாட   - 63:1-2  - கணிமேதாவியார்
எரிநிறநீள் பிண்டி யிணரின மெல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய்! பூந்தொடித்தோ
ளென்னணிந்த வீடில் பசப்பு.
- பாலை - கணிமேதாவியார்
                       
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே - (1)  
- தற்சிறப்புப் பாயிரம் - அமுதசாகரர்
நேமிநாதம்
தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர் வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.
- தற்சிறப்புப் பாயிரம்  - நேமிநாதம்

பிண்டியைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்

பல்பூம் பிண்டி                    கபிலர்
ஒண்தளிர் பிண்டி                நக்கீரர்
சாய்இழை பிண்டி                நல்லந்துவனார்
ஒண் பூம் பிண்டி                 மாங்குடி மருதனார்
எரிநிற நீள் பிண்டி               கணிமேதாவியார்
கடி மலர்ப் பிண்டி               நல்வழுதியார்
ஒண் பூம் பிண்டி                 கபிலர்
பொலம்பூம் பிண்டி              இளங்கோவடிகள்
கோதை தாழ் பிண்டி            இளங்கோவடிகள்
பூவிரி பிண்டி                        இளங்கோவடிகள்
பிணி நெகிழ் பிண்டி             பரிபாடல் திரட்டு
ஒண்தளிர் பிண்டி                நக்கீரதேவநாயனார்
சேடகப் பிண்டி                   கொங்குவேளீர்
செந்தளிர்ப் பிண்டி               கொங்குவேளீர்
செங்குழைப் பிண்டி             கொங்குவேளீர்
பெருந்தண் பிண்டி               கொங்குவேளீர்
எரிநிறநீள் பிண்டி                கணிமேதாவியார்
குளிர் பிண்டி                             திருஞானசம்பந்தர்
அரையோடலர் பிண்டி           திருஞானசம்பந்தர்
எரியணிந்தவிளம் பிண்டி       தோலாமொழித் தேவர்
செழும் பிண்டி                                தோலாமொழித் தேவ
அணிமலர்ப் பிண்டி              உதயன குமார காவியம்
அணிமலர்ப் பிண்டி              நாதகுமார காவியம்
செந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்
சேந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்
நறுமலர்ப் பிண்டி                யசோதர காவியம்
கடிமலர்ப் பிண்டி                            அமுதசாகரர்
ஓங்கு பிண்டி                                   திருத்தக்க தேவர்
விரிகொ டண்டளிர்ப் பிண்டி    நீலகேசி
பொன்னெயிற் பிண்டி                  நீலகேசி

பிண்டி மலர்களைப் பற்றி கூறப்படுபவை

பல்பூம்                    :               பல மலர்களையுடைய
ஒண்பூம்                    :              ஒளி பொருந்திய
கடிமலர்                       :           அதிக மலர்களைக் கொண்ட
பொலம் பூம்               :            அழகு, பொன்நிறம்
பூவிரி                             :           விரிந்து மலர்ந்த மலர்களையுடைய
எரி நிற நீள்                    :           சிவந்த நீண்ட மஞ்சரியை உடைய
அணி மலர்                      :           அழகான மலர் என மலர்களைப் பற்றியும்

இலைகள் பற்றிக் கூறுமிடத்து

ஒண்தளிர்              :           ஒளி பொருந்திய தளிர் இலை
செந்தளிர்                  :           சிவப்பான தளிர் இலை
செங் குழைப்              :           சிவப்பான இளம் தளிர்

     இந்த தாவரத்தை அசோகம் என்று உரையாசிரியர்கள் கூறுவது பொருந்தாது, எனெனில் மேற்கண்ட மலரைப் பற்றிக் கூறம் விளக்கங்கள் அசோக மலருக்கு பொருந்தாது. அசோகவின் மலரின் மஞ்சரிக் கொத்து கொத்தாக இருக்கும், ஆகையால் பிண்டியைப் பற்றிக் கூறும் மலரின் புறத்தோற்றப் பண்பைப் பார்க்கும் போது Humboldtia brunonis என்ற தாவரத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

                                                              பிண்டி மலர் 


                                                       Humboldtia brunonis  
தாவர விளக்கம்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Humboldtia
Vahl
பிறவி
பிண்டி
Species epithet
brunonis Wall.
பெயர் வழி
செந்தளிர்
Botanical Name
Humboldtia brunonis Wall.
தாவரவியல் பெயர்
பல்பூம் பிண்டிகபிலர்
Synonym
1 - Synonyms
வேறு இலக்கிய பெயர்கள்

Habit
Shrub
வளரியல்பு
செடி

3. செயலை
காப்பியங்கள்
                       ஐம்பெருங் காப்பியம்
  சிலப்பதிகாரம்
கயிலை நன் மலைஇறை மகனை! நின் மதிநுதல்
மயில் இயல் மடவரல் மலையர் தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்,
இயல் மணம் ஒழி, அருள் அவர் மணம் எனவே. -24:16.
 - வஞ்சிக்காண்டம்.

மணிமேகலை
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர்வாய் அம்பின் வாசம் கமழப் - 24:36-40.
 - ஆபுத்திரன் நாடு அடைந்த காதை.
இலக்கியங்கள்
                              சங்க இலக்கியம்
                எட்டுத்தொகை
அகநானூறு
நின்னொடு வினவல் கேளாய்!--பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.  -  7:17-22.
 - களிற்றுயானை நிரை - கயமனார்.
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினை தொடுத்த ஊசல், பாம்பு என
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;  - 68:2-7.
 - களிற்றியானை நிரை  -  ஊட்டியார்.
வந்தனன்ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்  - 38:6-8.
- களிற்றியானை நிரை.   - வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.
கொன்னே செய்தியோ, அரவம் பொன்என
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சி
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்
தழலை வாங்கியும், தட்டை ஒப்பியும்
அழல்ஏர் செயலை அம்தழை அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய, மழையே! -188:8-14.
                                                 - மணிமிடைப் பவளம் - வீரை வெளியன் தித்தனார்
ஐங்குறுநூறு
அத்தச் செயலைத் துப்புறழ் ஒண்டளிர்
புன்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட! நீ செலின்
நின் நயந்துறைவி என்னினுங் கலிழ்மே.   - 273.
 - குரக்குப் பத்து.  - கபிலர்.

நெய்யொடு மயக்கிய உழுந்தின் நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத் தழை வாடும் அன்னாய்.  - 211.
 - அன்னாய்ப் பத்து - கபிலர்

கலித்தொகை
புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால் - 15:10-13.
 - பாலைக் கலி -               பாலை பாடிய பெருங்கடுங்கோ.

குறுந்தொகை
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயலது
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இவ் அழுங்கல் ஊரே.    - 214:4-7.
 - தோழி கூற்று   - கூடலூர் கிழார்.
பத்துப்பாட்டு
            குறிஞ்சிப் பாட்டு
மெல் இரு முச்சி கவின் பெறக் கட்டி
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக - 104-106  - கபிலர்.

திருமுருகாற்றுப்படை
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல் வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்   -5:206-209  - நக்கீரர்.

நற்றிணை
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.   - 244:9-11
 - கூற்றங்குமரனார்.
குல்லை, குளவி, கூதளம், குவளை,
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின் சிறிய
நற்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை .    - 376:5-9.
 - கபிலர்.
பரிபாடல்
நினைமின் மாந்தீர் கேண்மின் கமழ் சீர்
சுனையெலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை யெலாம் செயலை மலர காய் கனி
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே.   - 15:29-35.
 - இளம்பெருவழுதி
மலைபடுகடாம்
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி
அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - 159-162.
- பெருங்கௌசிகனார்.

பதினென்கீழ்க்கணக்கு
       திணை மாலை நூற்றைம்பது
சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகை செயலை
யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி
யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை
யுதணாற் கடிந்தா னுளன்.   – கணிமேதாவியார்

செயலையைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்

செவ்வரைச் செயலை          நக்கீரர்
ஒண்தளிர்ச் செயலை          ஊட்டியார்
அம்தளிர்ச் செயலை           பேரிசாத்தனார்
அழல்ஏர் செயலை             வீரைவெளியன் தித்தனார்
அம்குழைச் செயலை          கபிலர்.
ஒலிக்குழைச் செயலை        கயமனார்
அம் தளிர் செயலை            பெருங்கடுங்கோ
மென் மலர்க் கோதை         திருத்தக்க தேவர்

செயலை பற்றி கூறூமிடத்து

முழுக்க முழுக்க இலையைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது.
மலர்களைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் செவ்வரை, ஒண்தளிர், அம் குழை, அம் தளிர், ஒலிக்குழை
அழல் ஏர் என்று  இளம் தளிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது.
     (a)     கொத்து கொத்தாக பளிச்சென்று ஒளி பொருந்திய அசோக மலர்களைப்பற்றிய குறிப்போ
     (b)     மாலை போன்று நீண்ட அடுக்கில் அமைந்துள்ள (பிண்டி) மலர்களைப் பற்றிய குறிப்போ   செயலை – தாவரத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆகையால் செயலை என்பது மேற்கண்ட 2- தாவரங்களுக்கும் பொருந்தாமல், மேற்கூறியஇலைப் பண்புகளை கொண்டCynometra cauliflora என்ற தாவரதிற்கு இலைகளை வைத்து ஒத்துப் போகிறது. மேலும் மேற்சொன்ன மூன்று தாவரங்களும் CAESALPINIACEAE என்ற ஓரே குடியைச் சார்தவை. ஒரே இயற்கைச் சூழலில் வளருபவை. குறிஞ்சி நிலத்தில் மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில் காணப்படுபவை என்பதைத் தவிர வேறு தொடர்பு இல்லை. ஆகையால் இவை மூன்றும் வெவ்வேறு பிறவியை (Genus) சாரந்தத் தாரவரங்கள் என்பதில் சந்தேகமில்லை.

Cynometra cauliflora                                செயலைத் தளிர்

Cynometra cauliflora 
தாவர விளக்கம்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Cynometra
Linn.
பிறவி
செயலை
Species epithet
cauliflora L.
பெயர் வழி
கோதை
Botanical Name
Cynometra cauliflora L.
தாவரவியல் பெயர்
ஒண்தளிர்ச் செயலைஊட்டியார்
Synonym
3 - Synonyms
Cynometra cauliflora Hassk. var. elongatis
Cynometra cauliflora Hassk. var. subsessilis
வேறு பெயர்கள்
Habit
Tree
வளரியல்பு
மரம்

இலக்கியங்களில் அசோகம் மரத்தை அடையாளம் காட்டும் போது கொத்தான மலர் என்றும், வாசனை பொருந்திய மலர் என்றும், ஒளி பொருந்திய மலர் என்றும் கூறப்படுகிறது.
                பிண்டியைப் பற்றிக் கூறும்போது ஒண் தளிர் என்றும், அணி மலர் மாலையைப் போன்று நீண்ட அடுக்கு பல மலர்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
                  செயலை தாவரத்தை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க இளந்தளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவ்வரை, ஒண் தளிர், அம் குழை, அம் தளிர் எனக் கூறப்பட்டுள்ளது. 
            ஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்ற கண்ணோட்டத்தில் சங்கஇலக்கியம்,,காப்பியங்கள்,பக்திஇலக்கியம்
பிற்காலஇலக்கியங்கள்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
     இதன் அடிப்படையில் இம்மூன்றும் வெவ்வேறானவை எனக்கருத  இடமுண்டு.
                  இம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம்  காணப்பட்டது தவறென்றும், அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.

No comments:

Post a Comment