செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Saturday, 26 November 2016

உலகத் தமிழ் பல்கலைக்கழகம்(USA) டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழா

பஞ்சவர்ணம்



எம்.வி. சுப்பையா


உலகத் தமிழ் பல்கலைக்கழகம்(USA) டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழாவில்முருகப்பா குழுமம் மற்றும் EIDபாரி நிறுவனங்ளின்மேனாள் தலைவர்
திருமிகு எம்.வி. சுப்பையாஅவர்கள் ஆற்றியஉரை
பஞ்சவர்ணம் - ஒரு புதையல்
நல்லவரும் வல்லவருமான பஞ்சவர்ணம் அவர்களைப் பாராட்டும் விழாவில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது குறித்து நான் பெரிதும் மகிழ்கிறேன்.  தகுதியுடைய ஒருவருக்கு அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.
பஞ்ச வர்ணம்
பஞ்ச வர்ணம் என்றால் ஐந்து நிறங்கள் என்று பொருள்.  கறுப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து நிறங்கள். இரவு நேர வானம் கறுப்பாய் இருக்கும், சூரியன் உதிக்கும் மிகச் சிறிய நேரம் பசுமை நிறம் இருக்கும். உதித்த பிறகு வானம் சிவப்பாய் இருக்கும்.  உயரும்போது மஞ்சள் நிறம் தென்படும்.  உச்சிக்குப் போகும்போது வெள்ளையாய் இருக்கும். ஒரு மனிதன் படிப்படியாய் உயர்ந்த நிலைக்குப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது இந்த நிறங்கள். நம் பஞ்சவர்ணம் அவர்கள் இப்படி உயர்வார்கள் என்று தெரிந்து இவரது பெற்றோர் இந்தப் பெயரை வைத்திருப்பார்களோ? என்று நாம் நினைக்க வேண்டி இருக்கிறது.
பஞ்ச இரத்தினங்கள்
முத்து, வைடூரியம், வைரம், பச்சை, நீலம் இவைகள் ஐந்தும் பஞ்ச இரத்தினங்கள் எனப்படும்.  உண்மை, உழைப்பு, நேர்மை, முயற்சி, திறமை இந்த ஐந்தும் பஞ்சவர்ணம் அவர்களிடம் இருக்கும் இரத்தினங்கள் ஆகும்.
பஞ்ச கச்சம்
வலது இடுப்பில் ஒன்று, இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து இடத்தில் செருகிக் கட்டும் வேட்டிக்குப் பஞ்ச கச்சம் என்று பெயர்.  எந்த நிலையில் இருந்தாலும் பஞ்சகச்சம் அவ்வளவு லேசில் அவிழாது. அத்தகைய உறுதியானது. பஞ்சவர்ணம் வகித்த 5 வெவ்வேறு பதவிகள்
1.       பண்ருட்டி நகர மன்றத் தலைவர்
2.       மாநிலத் திட்டக்குழு (குடிநீர் வடிகால் வாரிய) உறுப்பினர்
3.       கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்
4.       நெல்லிக்குப்பம் EID பாரி நிறுவனத்தின் கரும்பு விவசாயிகள் நிவாரணக்குழு நிறுவனர் மற்றும் தலைவர்
5.       தாவரத் தகவல் மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.
அவர் வகித்த அனைத்துப் பதவிகளிலும் அவர் அவிழாமல்இருக்ககட்டும் பஞ்ச கச்சம் வேட்டியைப்போல மிக உறுதியாகக் கொள்கைப் பிடிப்புடன் செயல்புரிந்தவர்.
பஞ்ச உலோகம்
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐந்து உலோகங்களின் கூட்டு பஞ்சலோகம் எனப்படும். இதில் செய்த சிலைகள் கோவிலுக்கு வெளியே ஊர்வலமாக எடுத்து வரப்பெற்றுப் பக்தர்களைத் தேடிச்சென்று அருள் பாலிக்கும்.
பஞ்சவர்ணம் பண்ருட்டி நகர்மன்றத் தலைவராய் இருந்தபோது,
1.       ஒரே ஜன்னல் முறை, அதாவது ஓரிடத்தில் அனைத்துச் சேவைகளும் வழங்கச்செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார்.
2.       அனைத்துச் செயல்களையும் கண்காணித்தார்.
3.       பொதுமக்களுக்கு நிர்வாகம் பற்றியும், எளிதாக அணுகும் முறை பற்றியும் கற்பித்தார்.
4.       சேவைகளில் ஏற்படும் கால தாமதங்களைத் தவிர்த்தார்.
5.       குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படும் முறை, ஒவ்வொருவரின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் தன்மை முதலியவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் அலுவலகத்தில் ஏற்படுத்தினார்.
இவரது இந்தச் செயல்பாடு பஞ்சலோகச் சிலைகள் போலப் பொதுமக்களைத் தேடிச்சென்று உதவியது.
பஞ்ச பூதங்கள்
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று – என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது உலகம். வாழ்க்கையில் வெற்றியடைய சில பாடங்களையும், தத்துவங்களையும் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
நிலம்:
இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும். தன்னுள் உள்ள வளங்களை மற்றவர்க்கு அளித்து மகிழும்.  நம்மிடம் உள்ள திறமைகளைச் சரிவர வெளிக்கொண்டுவந்து நாம் நமக்கும் பிறருக்கும் உதவ வேண்டும். மனித வளர்ச்சிக்கான ஏணி இடைவிடாத உழைப்பு.
வானம்:
எல்லையில்லாதது, உயர்ந்துநிற்பது. நமது இலட்சியங்கள் எல்லையற்று விரிய வேண்டும். பாதங்கள் மண்ணில் இருந்தாலும் பார்வை விண்ணில் இருக்க வேண்டும்.
நீர்:
பள்ளம் நோக்கிப் பாயும். தேவையற்ற சுமைகளைக் கடலில் கொண்டு தள்ளும். நமது வெற்றிக்குத் தடையாக உள்ள சோம்பல், பயம், தாழ்வு மனப்பான்மை, கவலை போன்றவற்றைக் கீழே இறக்கிவைத்துவிட வேண்டும். உதவாத எண்ணங்கள், செயல்கள், பழக்க வழக்கங்கள், நபர்கள் இவற்றை முற்றிலும் விட்டு விட வேண்டும்.
நெருப்பு:
தீயின் ஜூவாலைகள் மேல் நோக்கித்தான் இருக்கும். ஒரு சிறு தீப்பொறி பெரும் காட்டை அழிக்கும் அளவிற்கு மிகப் பெரிய நெருப்பை உண்டாக்கிவிடும். நமது எண்ணங்களும், செயல்பாடுகளும் வளர்ச்சி, முன்னேற்றம், மேன்மைகளை நோக்கி - அதாவது மேல் நோக்கித்தான் இருக்க வேண்டும்.  வாழ்ந்துகாட்ட வேண்டும், வெற்றி பெற வேண்டும் – என்ற ஒரு சிறு இலட்சிய வெறி எப்பொழுதும் நமக்குள் இருக்க வேண்டும்.
காற்று:
வாழ்வதற்கு மூச்சு முக்கியம். வளர்வதற்கு முயற்சி முக்கியம். காற்று நம்மைச்சுற்றி எப்போதும் இருக்கும். தன்னம்பிக்கையும் காற்றைப்போல ஒரு கவசமாய் நம்மைச்சுற்றி எப்போதும் இருக்க வேண்டும்.
இந்தப் பாடங்களை – தத்துவங்களை நன்கு உணர்ந்து கடைப்பிடித்ததால்தான்திரு. பஞ்சவர்ணம் அவர்கள் வாழ்வில் வியக்கத்தக்க வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
பஞ்ச கவ்யம்
பசுவின் பால், சாணம், கோமியம், பால் தருகின்ற தயிர், நெய் ஆகிய ஐந்துப் பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படும் உயிரிநீர்மக்கலவையைப் பஞ்ச கவ்யம் என்று வழங்குவார்.
இந்தப் பஞ்சகவ்யம் கோயில்களில் அபிஷேகப் பொருளாகவும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துவதுடன் வேளாண்மையில் உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், நோய் எதிர்ப்பு திறனூக்கியகவும் பயன்படுகிறது.
இந்தப் பஞ்ச கவ்யத்தைப் போலவே உண்மை, முயற்சி, உழைப்பு, எளிமை, சேவை– என்னும் ஐந்து உயர்பண்புகளின் கலவையால் உருவான திரு. பஞ்சவர்ணம் அவர்களும், நேர்மையான வெளிப்படையான நிர்வாகம், தாவாரவியலாராய்ச்சி, பசுமையாக்கம், நூல் வெளியீடு,பொதுத்தொண்டு – போன்றபலசெயல்களில்ஈடுபட்டு பலருக்கும் பயன்பட்டுவருகிறார்.
சிறுபஞ்ச மூலம்
மூலம் என்றால் வேர் என்று பொருள். மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள்
1.       கண்டங்கத்தரி வேர்
2.       சிறுவழுதுணை வேர்
3.       சிறுமல்லி வேர்
4.       நெருஞ்சி வேர்
5.       பெருமல்லி வேர்
இவை சிறுபஞ்ச மூலம் எனப்படும்.  இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன.
ஊழலற்ற, வெளிப்படையான, வேகமான, திறன்மிக்க, தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து சிறுபஞ்ச மூலம் சேர்ந்த இவரது நிர்வாகம் பண்ருட்டி நகராட்சியை முன் மாதிரியாக மாற்றியது.
பெரும் பஞ்ச மூலம்
வில்வ வேர், பெருங்குமிழ் வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், வாகை வேர் ஐந்தும் பெரும் பஞ்ச மூலமாகும். இவை உடலினை உறுதி செய்யும். மக்கட்பணி, விவசாயிகள் நலம், நகராட்சி நிர்வாகம், தாவரத்தகவல், பதிப்பகப்பணி இவை ஐந்தும் பஞ்சவர்ணம் அவர்கள் தான் பிறந்த மண்ணின் மைந்தர்களை உறுதி செய்ய பயன்படுத்திய பெரும் பஞ்ச மூலமாகும்.
எருப்போட்டவன் காடுதான் விளையும் என்பது பழமொழி. பஞ்சவர்ணம் அவர்கள் இப்படி பஞ்ச வர்ணமாய், பஞ்ச இரத்தினமாய், பஞ்ச கச்சமாய், பஞ்ச உலோகமாய், பஞ்ச பூதமாய், சிறுபஞ்ச மூலமாய், பெரும் பஞ்ச மூலமாய் நல்ல முன்மாதிரியாய்த் திகழ்வதை நினைக்கும்போது எனக்கு இரண்டு பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன.
1. அகல உழுவதை விட ஆழ உழு
நிலம் உழும்போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டுத் தாதுப் பொருட்கள் குறைந்து காணப்படும். புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுது செல்வதைவிட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும்போதும், கல்வி கற்கும் போதும், சில செய்திகள்-தகவல்களைக் கற்றுக்கொள்ளும்போதும் மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துக்கொள்ளல் இன்றியமையாததாகும். அதுவே நிலைக்கும். எதையும் நன்கு ஆழமாய் உணர்ந்து, பயன் அதிகம் கிடைக்கும்படி செயல்படுதல் திரு. பஞ்சவர்ணம் அவர்களது இயல்பு.
2. செஞ்ச உதவியும் இட்டு வைத்த விதையும், வீணாகப் போகாது
பலன்கிடைத்தாலும்,கிடைக்காதுபோனாலும்நாம்பிறருக்குஎவ்வகையிலாவது உதவுதல்வேண்டும். திரு. பஞ்சவர்ணம் அவர்கள் மற்றவர்க்கு உதவுவதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக்கைக்கொண்டு எல்லோரும் வாழவேண்டும் என்ற வாழ்வியல் அறத்தைப் பின்பற்றி வருபவர்.
இறுதியாக ஒன்றைக்கூற விரும்புகிறேன். தொடக்கத்தில் எனக்கும் இவருக்கும் சிறுசிறு பிரச்சனைகளும்,எதிர்ப்புகளும்இருந்தன. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதால் காலப்போக்கில் ஆழமான நட்பு ஏற்பட்டு இருவருக்கும் நல்ல புரிதலும், அதனால் பல பேருக்கு நல்ல நன்மைகளும் விளைந்தன. நீர் அடித்து நீர் விலகுமா என்பார்கள். தேங்கிக்கிடக்கும் நீரில் வேகமாக வந்து நீர்மோதினாலும் நீர் ஒருபோதும் விலகுவதில்லை. ஒன்றுசேர்ந்து இரண்டறக்கலந்துவிடும்.
அதுபோல உறவுகளுக்குள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உறவை முறித்துக்கொள்ளாது விட்டுக்கொடுத்து நீர்போலச் சேர்ந்து வாழ வேண்டும்.
நல்லவரும் வல்லவருமான திரு. பஞ்சவர்ணம் அவர்கள் நீள் ஆயுள், நிறைந்த மனது, நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று மேலும்மேலும் பற்பல விருதுகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ அண்ணாமலையாரின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.

நன்றி

No comments:

Post a Comment