பஞ்சவர்ணம் அவர்களின் பாராட்டு விழா வாழ்த்து
Sri Sarda Ashram
Vivekananda nagar, New Edaikkal
Ulundurpet – 606 107
Villupuram District, Tamil Nadu
Cell: 89030 06955, 94431 21452
94874 94860 37372
E-mail: ashram@srisaradaashram.org
Website: www.srisaradaashram.org
பேரன்பிற்குரிய ஸ்ரீமான் பஞ்சவர்ணம் அவர்களுக்கு,
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருவருளை முன்னிட்டு எழுதுவது. தாங்களும்,
தங்களுடைய குடும்பத்தினரும் நலமுடன் வாழ பிராத்தனை செய்து கொள்கிறோம்.
உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் (USA)
தங்களுக்கு “மதிப்புறு முனைவர்” பட்டம் வழங்கி கௌரவித்ததற்கான பாராட்டு விழா அழைப்பிதழ் கண்டி
நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
தங்கள் பண்ருட்டி நகரமன்றத் தலைவராக இருந்த காலம் முதலே தங்களின்
உழைப்பையும், சிந்தனையையும், நேர்மையையும், மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழமான
அன்பையும் கண்டு நாங்கள் பலமுறை வியந்து இருக்கிறோம். கணினி அறிமுகமான அதன் ஆரம்ப காலங்களிலேயே
அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன், காலதாமதமின்றி மக்களின்
தேவைகளை நிறைவேற்ற தாங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பையும் அதன்பின் நிறைந்து இருந்த
நல்லுணர்வுகளையும் நமது ஆஸ்ரம சகோதரிகள் நேரில் வந்து பார்த்து அதைப் பற்றி
அடிக்கடி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில்
இருக்கிறது.
ஒரு மனிதர் ஒரு துறையில் சிறந்து விளங்கவே கடுமையாக உழைக்க வேண்டி
இருக்கும். தாங்களோ பண்ருட்டி போன்ற ஒரு
பெரிய வியாபார நகரில் தலைவராக, அந்தப் பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்றியத்தோடு
மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அளவில்லாத அன்பு கொண்டு தங்கள் அலுவலகத்திலேயே ஒரு
அற்புதமான மூலிகைப் பண்ணையும், தோட்டமும் அமைத்ததையும், தன்வந்திரி ஆலயத்தில்
மற்றும் திருவதிகை திருத்தலத்தில் மூலிகைகள் வளர்த்ததையும், பண்ருட்டி நகரை மரங்கள்
நிறைந்த நகரமாக மாற்றியதும் இவை மட்டுமல்லாது தங்கள் இல்லத்திலேயே விதவிதமான அரிய
வகை தாவரங்களை பாதுகாத்து வளர்த்ததையும் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்த்து செயலூக்கம்
பெற வேண்டிய அற்புதமான நிகழ்வுகள்!
இந்தக் கலியுகத்தில் தர்மம் தாழ்ந்து அதர்மம் தழைத்து நேர்மையான
உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதோ என்று நல்லவர்கள் ஏங்கும் போது, “இறைவா! நேர்மை
ஜெயிக்க வேண்டும்! நல்லவர்கள் வெற்றியாளர்களாக வர வேண்டும்!
அவர்களின் கடினமான உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு அகில உலகத்துக்கும் தெரிய வேண்டும்!”
என்று பல நாட்கள் ஆஸ்ரம துறவிச் சகோதரிகள் மனம் உருகி பிரார்த்தனை
செய்து இருக்கிறோம். தங்களுக்குக்
கிடைத்துள்ள இந்த அற்புதமான பட்டத்தின் மூலம் இறைவன் எங்கள் பிரார்த்தனையை
நிறைவேற்றியுள்ளதாக பூரணமாக நினைக்கிறோம்.
தாவரங்கள் பற்றி தாங்கள் எழுதியுள்ள புத்தங்களை ஒன்று விடாமல் நாங்கள்
படித்து இருக்கிறோம். அதன் ஒவ்வொரு பக்கமும் தங்களின் உழைப்பை பேசுவதை உணர்ந்து
இருக்கிறோம். எத்தனையோ நபர்களை சந்தித்து,
எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, எத்தனையோ புத்தகங்களைப் படித்து, எத்தனையோ
விஷயங்களை ஆராய்ந்து, இரவுப்பகல் பாராமல் தாங்கள் கடுமையாக உழைத்ததன் மூலமே அந்தப்
புத்தகங்கள் வெளிவந்திருக்கும். கிராமம்,
கிராமமாக பாரம்பரிய நெல் இரகங்களைத் தேடி தமிழகம் முழுவதும் அலைந்த எங்களால்
மற்றவர்களை விட தங்கள் உழைப்பின் வீரியத்தை நிச்சயமாகப் புரிந்துகொள்ள
இயலும். தங்களின் மூலிகைகள் குறித்த
நூல்கள் மருத்துவத் துறைக்கு கிடைத்த பொக்கிஷங்களுள் ஒன்று.
தங்களின் இலட்சியப் பயணம் மேலும் வெற்றி நடை போடவும், தங்களின்
அளப்பறிய அற்புதமான பணி சமுதாயத்திற்கு பயன்படவும், தங்களின் சிந்தனைகள் மேலும்
மேலும் வளரவும், பட்டங்களும் பாராட்டுகளும், தகுதிகள் அனைத்துமுள்ள தங்களைத் தேடி
வரவும் எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இறைவனின் பேரருளும், சித்தர் பெருமக்களின் ஆசீர்வாதங்களும், ஆஸ்ரம
துறவிச் சகோதரிகளின் பிரார்த்தனையும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் என்றும்
தங்கள் உடன் இருந்து தெய்வீகக் கவசமாக தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காத்து
நிற்கும்!
தாங்களும், தங்கள் மனைவி திருமதி கஸ்தூரியும், தங்கள் மகன்கள்
தேவகுமார், சுதாகர், மகள்கள் கோமதி, பிரியமாலினி அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன்
சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ தெய்வத் திருமூவரின் திருவடிகளில் மனமுருகி
பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துகளுடனும், நெகிழ்ந்த பிரார்த்தனைகளுடனும்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடித்தொண்டில்,
ராமகிருஷ்ண பிரியா அம்பா
(தலைமை மாதாஜி)
யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா
No comments:
Post a Comment