செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday, 1 May 2017

எனது பார்வையில் இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

பஞ்சவர்ணம்
பனைமரம்





















சிவலிங்கராஜா



பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் (ஓய்வு)
யாழ்ப்பாணம்

எனது பார்வையில்
இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனைமரம் என்னும் பாரிய நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இவர் பற்றிய தகவல்களை நண்பர் விருபா குமரேசன் தந்தார்கள்.
பஞ்சவர்ணம் உழைப்பையும் ஊக்கத்தையும் இந்நூலைப் பார்க்கும் சிறுவர்கள்கூட உணர்ந்துகொள்வர்.
ஆசிரியர் பஞ்சவர்ணம், நூல் பச்சை வண்ணம். முன்னால் ஒரு தனிப்பனை. பின்னால் ஒருபனங்கூடல் (எமது நாட்டிலே பனைகள் கூட்டமாக நிற்பதைப் பனங்கூடல்என்றே அழைப்பார்கள்.) அட்டைப்படம் அழகாக இருக்கிறது.
பல்வேறு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்த நூலைப் படித்தேன். எங்கள் ஊரிலே பனங்காய்ப்பாரதம் என்று ஒரு நூல் இருந்தது. ஆனால் இது பனைமரப்பாரதம் என்று எண்ணிக்கொண்டேன். பாரதம் ஒருநாளில் படித்து முடிக்கக் கூடியதல்லவே.
பனை பற்றி இனித் தேடமுடியாது என்ற அளவுக்குப் பஞ்சவர்ணம் பனை பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றார். தமிழ்மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன தாவரம் பனை. சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியங்கள் வரை பனை முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளது - பெற்று வருகின்றது.
இலக்கியங்களில் மாத்திரமன்றிப் பண்டைய தமிழ் இலக்கண நூல்களிலும் பனை இடம்பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் பஞ்சவர்ணம் இந்நூலிலே தந்துள்ளார்.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதைகளிலும் பனை முக்கிய இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழநாட்டிலே பனையைத் தலைப்பாகக் கொண்டும், பனைசார் தொழிலாளர்களை மையமாகக் கொண்டும் புனைகதைகள் பல தோன்றியுள்ளன. உ+ம் : செங்கையாழியானின் முற்றத்து ஒற்றைப்பனை.
செந்நெறி இலக்கியங்களில் மாத்திரமன்றி நாட்டார் இலக்கியங்களிலும் பனை முதன்மை பெற்று வந்துள்ளது. குறிப்பாகப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலியவற்றிலேயும் பனை பிரதான இடத்தைப் பெற்று வந்துள்ளது.
பனைமரம் என்ற இந்த நூல் இலக்கியம், வரலாறு, சமூகம், அரசியல், மருத்துவம், நாட்டார் வழக்காறு, உணவு, உறையுள் முதலான பல்வேறு விடயங்களையும் உள்வாங்கியுள்ளமை பாராட்டிற்குரியது. ஆசிரியரின் குன்றா உழைப்புக்கும் குறையா ஊக்கத்திற்கும் இவை சான்றாகும். இவை ஒவ்வொன்றையும் விரித்து எழுதுவதானால், இன்னொரு பனங்காய்ப்பாரதம் தோன்றிவிடும். விரிவஞ்சி விடுத்தோம்.
பனைமரம் என்ற இந்த நூலைப் பார்த்ததும் இரண்டு விடயங்கள் எமது எண்ணத்தில் ஆழமாக வேரோடின. ஒன்று, எமது கல்விப் பாரம்பரியமும் பனையும். இரண்டு, ஈழத்துக் குறிப்பாக வடபுலத்து மக்களின் வாழ்வியலிலே பனை பெற்ற முக்கியத்துவம்.
எமது கல்விப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்துப் பேணியும் பதிவு செய்தும் வைத்த பெருமை பனைமரத்திற்கே உரியது. இனிவரும் இடங்களிலே பனைமரத்தைப் பனை என்றே குறிப்பிடுவோம். பனை என்பதே போதுமானது. பனை ஓலையிலே (ஓரளவுக்கு முற்றிய சார்வு) தான் ஏடுசெய்யப்பட்டது. ஏடு செய்வதையே பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்ந்த குடும்பங்களும் இங்கே இருந்தன. அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் ஏட்டிலேயே எழுதினர். பனை ஓலையிலே எழுதப்பட்டதால் ஆவணங்களுக்கே ஓலைஎன்று பெயர். உதாரணமாகப் பெரியபுராணத்தில் வரும் மூல ஓலை, படி ஓலைஎன்ற தொடரையும், திருவெங்கைக் கலம்பகத்திலே வரும் ஓலை காற்றில் உருட்டடாஎன்ற தொடரையும் சுட்டிக்காட்டலாம். தென் இலங்கையிலே தளப்பத்துஎன்கின்ற (பனை போன்ற ஒரு தாவரம்) தாவரத்தின் ஓலையையே ஏடுஆகப் பாவித்தனர் என்று கூறுகின்றனர்.
பனை இல்லையேல் பழந்தமிழ் இலக்கியங்களை இன்று நாம் பெற்றிருக்க முடியாது. ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகின்றது……” எனத் தொடங்கும் சி.வை.தா.வின் உருக்கமான தொடரும், ‘ஏடு காத்த கிழவர்என உ.வே.சா.வைக் குறிப்பிடும் பொழுதும் எம் மனக்கண் முன் பனையே விஸ்வரூபமாக நிமிர்ந்து நிற்கிறது.
வாழ்வியலோடு ஒன்றிய கருப் பொருளாகிய பனைக்குத் தமிழ் இலக்கியங்கள் முக்கிய இடத்தைக் கொடுத்திருக்கின்றன. நேரடியாக, மறைமுகமான, உவமையாகப் பனையும் பனம் பண்டங்களும் இலக்கியங்களிலே பதிவாகியுள்ளன. காவியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் முதலானவை பனை பற்றி நிறையவே பேசுகின்றன. பஞ்சவர்ணம் இவை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்.
பனையின் பயன்பாட்டினைப் பல தளங்களிலே நோக்கியுள்ள ஆசிரியர், பல தகவல்களையும் புள்ளி விபர அடிப்படையிலே விஞ்ஞான ரீதியாக விளக்கியுள்ளார். பனங்கள்ளினையும் நவீன பானங்களையும் ஒப்பீட்டு அடிப்படையிலே காட்டியுள்ளமையைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
பனையில் இருந்து பெறும் பொருள்களைக் கொண்டு பனம் பண்டங்களைத் (பனையிலிருந்து பெறும் உணவுப் பொருட்களைப் பனம் பண்டம் என்று வழங்கும் வழக்காறு யாழ்ப்பாணத்திலே உண்டு) தயாரிக்கும் முறைகளை மனையியல்பாட விளக்கம் போல ஆசிரியர் தருகின்றார்.
அழகான படங்கள் (நறுக்கு ஓவியம் உட்பட) இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பனை பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், உதாரணப் பாடல்கள் எனப் பல விடயங்கள் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.
ஈழநாட்டிலே பனையின் பயன்பாடு பற்றிய இலக்கியங்களையும் செய்திகளையும் (பனை அபிவிருத்திச் சபை உட்பட) தந்துள்ள பஞ்சவர்ணம் தமக்குக் கிடைத்த தகவல்களையே பதிவுசெய்துள்ளார். இன்னும் இடம்பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன.
பனை பற்றியும் பனையின் பயன்பாடு பற்றியும் ஈழத்து அறிஞர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். இவர்களிலே பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வியந்து குறிப்பிடப்பட வேண்டியவர். இவர் எழுதிய காதலியாற்றுப் படையிலே பனை மிக முக்கிய இடம் பெறுகின்றது. காதலியாற்றுப்படைத் தலைவகைக் கரு நெடும்பனங்காடு கிழவோனேஎன்று கூறியே ஆற்றுப்படையை நிறைவுசெய்கின்றார்.
இலங்கையில் நடந்த யுத்தகாலங்களிலே பனையின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை விரிவாகப் பேசவேண்டியவை.
இந்நூல் ஒரு புதிய பெரிய முயற்சி. நீண்டநாள் உழைப்பின் அறுவடை. எமது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பனையின் விஸ்வரூபத்தைக் காட்டும் அரியதோர் ஆவணம். அறிஞர் இரா.பஞ்சவர்ணத்திற்கு எம் பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment