செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Wednesday 1 May 2013

6. பிண்டி- pindi



ங் இலக்கியத் தாவரங்கள்


6. பிண்டி

அசோகு, பிண்டி, செயலை இம்மூன்றும் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஒன்றென கொண்டனர். ஆனால் இம்மூன்றும் ஒரே தாவரம் அல்ல.
   
பிண்டி மலர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில், பல்பூம் பிண்டி, சாய்இழை பிண்டி, ஒண்பூம் பிண்டி, எரிநிற நீள் பிண்டி
கடிமலர்ப் பிண்டி,  என்று மலர்களை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.
     
சங்க இலக்கியம்
பத்துப்பாட்டு
                                 குறிஞ்சிப் பாட்டு

பைங் காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ செந் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய  -117-122.
   - கபிலர். .

அடும்பு, அமர்ஆத்தி, நெடுங்கொடி அவரை
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், 87-89.
  - கபிலர்.
                  திருமுருகாற்றுப்படை
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்பத் திண் காழ்-1:31,32.
                                                                           - நக்கீரர்..
                    மதுரைக்காஞ்சி 
சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன  - 700-703.
 - மாங்குடி மருதனார். .

எட்டுத்தொகை
                          பரிபாடல் 

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்- 11:94-98.
 - நல்லந்துவனார்.

கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி
அடிமேல் அடிமேல் ஒதுங்கி தொடி முன்கைக் 12:88-90.
 -  நல்வழுதியார்.
               பரிபாடல் திரட்டு
ஒருசார்அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி
மணி நிறம் கொண்ட மலை  - 1:7-9.
 - திருமால்.

பதினென்கீழ்க்கணக்கு
                  பழமொழி நானூறு
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.        
 - தற்சிறப்புப் பாயிரம்.

               கைந்நிலை
பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம். - 36
        - பாசம் பட்டு ஓடு - புல்லங்காடனார்

திணை மாலை நூற்றைம்பது
எரிநிற நீள் பிண்டி இணர் எல்லம்
வரிநிற நீள் வண்டர் பாட   - 63:1-2  - கணிமேதாவியார்
எரிநிறநீள் பிண்டி யிணரின மெல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய்! பூந்தொடித்தோ
ளென்னணிந்த வீடில் பசப்பு.
- பாலை - கணிமேதாவியார்


இதிகாசங்கள்
                              கம்பராமாயணம்

ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங்  கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்புவைக்கலாமோ-4598:46.
                                              - கிட்கிந்தா காண்டம். - நாட விட்ட படலம்.

பின்னங்கள் உகிரிற் செய்து பிண்டி அம் தளிர் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பித்,     தேன் மலர் கொய்கின்றாரும் :
வன்னங்கள் பலவும் தோன்ற      மணி ஒளிர் மலையில் நில்லா
அன்னங்கள் புகுந்த என்ன,      அகன் சுனை குடைகின்றாரும்.    - 951:54
                                           - பால காண்டம். - வரைக்காட்சிப் படலம்.

ஐம்பெருங் காப்பியம்
                 சிலப்பதிகாரம்
காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் மேல் இருந்து அருளி  -  15:151-154.
                                              - மதுரைக்காண்டம் -  அடைக்கலக் காதை.

கோதை தாழ்பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதி இல் தோற்றத்து அறிவினை வணங்கிக் -11:3,4.
                                          - மதுரைக்காண்டம் -காடுகாண் காதை.

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர் அணி விழவினம் நெடும்தேர் விழவினும்  -  10:21,22.
                                        -  புகார்க்காண்டம்.  - நாடுகாண் காதை.

சீவகசிந்தாமணி
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே  - 149.
                     - நாமகள் இலம்பகம்  - கோயிற் சிறப்பு.

தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே  - 223.
                                        - சச்சந்தன் வரலாறு  -- நாமகள் இலம்பகம்.
ஐஞ்சிறு காப்பியம்
                     சூளாமணி
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
 இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று  திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே 
 கைகளும் இடைகளும்

நீலகேசி
அரிய வாயின செய்திட் டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப் பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டி மரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய் பெரியவர்ப் பெரியவர்ப்பெரியாய்.-156

 அடைவிலா யோனி யானா யாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான மெய்திக் கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப் பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ னென்றாற் குற்றமிங் கென்னை யென்றாள்  -445.  

கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை
யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை
 பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற்
கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ   - 590
.
யசோதர காவியம்
இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி  வண்டா
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.   - 221
                                                                          - நான்காஞ் சருக்கம்

உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.   – 235
                                                                   - நான்காஞ் சருக்கம்

உதயன குமார காவியம்
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே.  - 1
                                               - உஞ்சைக் காண்டம்  - கடவுள் வாழ்த்து.

நாககுமார காவியம்
மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும் எந்தம்
இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே   
                                                                 - காப்பு.முதல் சருக்கம்.
செந்தளிர்ப் பிண்டியின் கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.
                             -தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்    - 1

பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு  மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்  - 16

வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியி ன்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்
சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும்கனாப்பயன்கேட்டல்- 43

 பக்தி இலக்கியம்
   கந்தபுராணம்
சூலம் திகிரிப் படை தோமரம் துய்ய பிண்டி
பாலம் சுடர் வேல் எழு நாஞ்சில் பகழி தண்டம்
ஆலம் கணையங் குலிச ஆயுதம் ஆதி ஆக
வேலும் படைகள் பொழிந்து ஆர்த்தனர் எங்கும் ஈண்டி  - 1485
- உற்பத்தி காண்டம் - தாரகன் வதைப் படலம்

எண் தகும் சம்புடம் வேட்டிதம் விசும்பிதம் உற்புல்லம்
பிண்டிதம் பீடிதம்மே பிரேதுகை அநுபாதம் தான்
பண்டதங் கடக மத்த பத்ம வாசனம் சமூர்த்தம்
தண்டகம் லளிதம் வேணுச் சாரிதம் சமவே சன்னம்  - 8259
 - தேவ காண்டம - கந்த வெற்புறு படலம்
          
மண்டலம் புகழும் தொல்சீர் வள்ளி அம் சிலம்பின் மேல் போய்ப்
பிண்டி அம் தினையின் பைம் கூழ்ப் பெரும் புனத்து இறைவி தன்னைக்
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
பண்டு ஒரு புடையில் வைத்த பழம் பொருள்கிடைத்தவாபோல்-10146
- தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம் 
          
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திருவெள்ளறை நின்றானே! .. 1376: 5-8

பெருங்காதை
அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும்
பொருவின் னாழிகை பூணு மாறும்
செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்
சாரியை விலக்கும் வேறிரி வகையும்
இடுக்கட் போதி னேமப் பூமியுள்  - 30
                                              - உஞ்சைக்காண்டம்  - விழாக் கொண்டது

பைந்தளிர் பொதுளிய பனிமலர்க் காவிற்
செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறுந் தொடுத்த
பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர் கோத்த
பண்ணுறு பல்வினைப் பவழத் திண்மணை
ஊக்கமை யூசல் வேட்கையின் விரும்பினும  - 175
                                              - உஞ்சைக்காண்டம்  - உழைச்சன விலாவணை
  
பெருஞ்செண் பகமும் பிண்டியும்  பிரம்பும்
கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
                                          - உஞ்சைக்காண்டம்  - முல்லை நிலங் கடந்தது

கல்லிற் காட்டிய செல்லற் றூவழிப்
பிண்டி பிணங்கிப் பிலம்புக் கதுபோல்
கண்டவர்க் காயினுங் கடத்தற் காகா
அருமை யெய்திய வரிலமை யாரிடை
இறும்பம லடுக்கத் தின்றேன் கொளீஇய  - 45
                               - உஞ்சைக்காண்டம்  - முல்லை நிலங் கடந்தது

கோலக் கோயிலொடு குரம்பை கூடிப்
பலவு மாவு நலமா நாகமும்
மகிழும் பிண்டியும் வரியிதழ் அனிச்சமும்
வேங்கையும் ஆவும் விளவும் வேயும்  - 10-13
                                            - இலாவாண காண்டம் - மாசன மகிழ்ந்தது

செப்படர் அன்னசெங்குழைப் பிண்டிக்
கப்புடைக் கவிசினை நற்புடை நான்ற
தழைக்கயிற் றூசல் விருப்பிற் றூக்கியும்
பைங்கொடி முல்லை வெண்போது பறித்தும்
கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்  - 25-29
                                    - இலாவாண காண்டம் - உண்டாட்டு

பெருந்தண் பிண்டி பிணங்கிய நீழல்
அரும்படைத் தானை அகன்ற செவ்வியுள்
வயந்தக குமரனொடு வத்தவன் இருந்துழி  - 45 - 47
                                 - இலாவாண காண்டம் - விரிசிகை மாலைசூட்டு
  
பன்னிரு திருமுறை

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.
- 1-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர்கள்  பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் -2
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே
- 2-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)
               
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண வாளனே.
- 3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.
- 3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக் கென்றுபல் வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் வக்கரையே
-3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் புகவெறிகொள் சண்பைநகரே
-3-ம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்
தகவண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற(டு) உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
-11-ம் திருமுறை - தேவாரம் (நக்கீரதேவநாயனார்)

                       
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே - (1)  
- தற்சிறப்புப் பாயிரம் - அமுதசாகரர்
நேமிநாதம்
தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர் வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.
- தற்சிறப்புப் பாயிரம்  - நேமிநாதம்

பிண்டியைப் பற்றிய சங்க இலக்கிய அடைமொழிகள்

பல்பூம் பிண்டி                    கபிலர்
ஒண்தளிர் பிண்டி                நக்கீரர்
சாய்இழை பிண்டி                நல்லந்துவனார்
ஒண் பூம் பிண்டி                 மாங்குடி மருதனார்
எரிநிற நீள் பிண்டி               கணிமேதாவியார்
கடி மலர்ப் பிண்டி               நல்வழுதியார்
ஒண் பூம் பிண்டி                 கபிலர்
பிணி நெகிழ் பிண்டி             பரிபாடல் திரட்டு
 
இதர இலக்கிய அடைமொழிகள்

பொலம்பூம் பிண்டி              இளங்கோவடிகள்
கோதை தாழ் பிண்டி            இளங்கோவடிகள்
பூவிரி பிண்டி                 இளங்கோவடிகள்
ஒண்தளிர் பிண்டி                நக்கீரதேவநாயனார்
சேடகப் பிண்டி                      கொங்குவேளீர்
செந்தளிர்ப் பிண்டி               கொங்குவேளீர்
செங்குழைப் பிண்டி             கொங்குவேளீர்
பெருந்தண் பிண்டி               கொங்குவேளீர்
எரிநிறநீள் பிண்டி                 கணிமேதாவியார்
குளிர் பிண்டி                 திருஞானசம்பந்தர்
அரையோடலர் பிண்டி         திருஞானசம்பந்தர்
எரியணிந்தவிளம் பிண்டி     தோலாமொழித் தேவர்
செழும் பிண்டி               தோலாமொழித் தேவ
அணிமலர்ப் பிண்டி              உதயன குமார காவியம்
அணிமலர்ப் பிண்டி              நாதகுமார காவியம்
செந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்
சேந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்
நறுமலர்ப் பிண்டி                யசோதர காவியம்
கடிமலர்ப் பிண்டி           அமுதசாகரர்
ஓங்கு பிண்டி                திருத்தக்க தேவர்
விரிகொடண்டளிர்ப் பிண்டி    நீலகேசி
பொன்னெயிற் பிண்டி           நீலகேசி

பிண்டி மலர்களைப் பற்றி கூறப்படுபவை

பல்பூம்                    :  பல மலர்களையுடைய
ஒண்பூம்                 :  ஒளி பொருந்திய
கடிமலர்                   : அதிக மலர்களைக் கொண்ட
பொலம் பூம்          : அழகு, பொன்நிறம்
பூவிரி                       : விரிந்து மலர்ந்த மலர்களையுடைய
எரி நிற நீள்             : சிவந்த நீண்ட மஞ்சரியை உடைய
அணி மலர்                : அழகான மலர் 
என மலர்களைப் பற்றியும்

இலைகள் பற்றிக் கூறுமிடத்து

ஒண்தளிர்                 :ஒளி பொருந்திய தளிர் இலை
செந்தளிர்                  :சிவப்பான தளிர் இலை
செங் குழைப்            :சிவப்பான இளம் தளிர்

     இந்த தாவரத்தை அசோகம் என்று உரையாசிரியர்கள் கூறுவது பொருந்தாது, எனெனில் மேற்கண்ட மலரைப் பற்றிக் கூறம் விளக்கங்கள் அசோக மலருக்கு பொருந்தாது.

அசோகவின் மலரின் மஞ்சரிக் கொத்து கொத்தாக இருக்கும், ஆனால் பிண்டி மலரோ மாலை கோர்த்தது போல் மஞ்சரிக் கொத்து இருக்கும், மேலும் சிவப்பான இளம்தளிர் இருக்கும்,
ஆகையால் பிண்டியைப் பற்றிக் கூறும் மலரின் புறத்தோற்றப் பண்பையும், சிவப்பான இளம் தளிரையும் பார்க்கும் போது Humboldtia brunonis என்ற தாவரத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

                                                              பிண்டி மலர் 
Humboldtia brunonis

                                                         
 தாவர வகைப்பாட்டியல்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Humboldtia
Vahl
பிறவி
பிண்டி
Species epithet
brunonis Wall.
பெயர் வழி
செந்தளிர்
Botanical Name
Humboldtia brunonis Wall.
தாவரவியல் பெயர்
பல்பூம் பிண்டி கபிலர்
Synonym
1 - Synonyms
வேறு இலக்கிய பெயர்கள்
Habit
Shrub
வளரியல்பு
செடி

தாவர விளக்கம்
மரத்தின் பன்புகள்
வளரியல்பு :சிறு மரம் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
சிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; புதிய நுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோண விளிம்பு கொண்டது மற்றும் உரோமங்களுடையது.
இலைகள் :கூட்டிலைகள், இரட்டைபடை இணை சிற்றிலைகள் (Paripinnate), மாற்று அடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (distichous), இரண்டு இலையடிச்செதில்களுடையது, ஈட்டி வடிவம் மற்றும் படர்ந்த கிட்னி வடிவ இலைபோன்ற செதில்; மையக்காம்பு(Rachis) சுமார் 6 செ.மீ. நீளமானது, கோணவடிவானது, சிறிய இறகு போன்று அமைப்புடையது; சிற்றிலை இரட்டைகளானவை, மிகச்சிறிய காம்புடையது, இலை கிட்டத்தட்ட 8-26 X 2-8.3 செ.மீ. பரப்பளவுடையவை, குறுகிய நீள்வட்டம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம், நுனி சிறிய வால் போன்ற கூர்மையானது மற்றும் சிறிது துருத்திய முனையுடையது. தளம் சமமற்றது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் சுமாராக 10 வரை இரட்டைகளானவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி:தண்டின் இலைக்கோணங்களில் நுனிவளர்பூந்துணர் (Raceme) அமைந்திருக்கும்.
மலர்கள்:வெள்ளை நிறமான புல்லி இதழ் மற்றும் அல்லி இதழ் இளஞ்சிவப்பு நிறமானது.
கனிகள்:இருபுற வெடிகனி (Pod) (அவரைப்போன்றது), ஏறக்குறைய 7 X 3 செ.மீ. நீளமானது, தட்டையானது, உலரும் போது திருகியது.
விதைகள்:தட்டையாகவும், உருண்டையாகவும் இருக்கும்.
வாழ்விடம் :கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 200 மீ. - 800 மீ. உயரம் வரை உள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.
பரவியிருக்குமிடம் :மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (Endemic) காணப்படும் - மத்திய சயாத்திரி பகுதியில் உள்ள வயநாடு மற்றும் சிருங்கேரி இடைப்பட்ட பகுதியில் காணப்படும்.

இலக்கியங்களில் அசோகம் மரத்தை அடையாளம் காட்டும் போது கொத்தான மலர் என்றும், வாசனை பொருந்திய மலர் என்றும், ஒளி பொருந்திய மலர் என்றும் கூறப்படுகிறது.
                பிண்டியைப் பற்றிக் கூறும்போது ஒண் தளிர் என்றும், அணி மலர் மாலையைப் போன்று நீண்ட அடுக்கு பல மலர்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
                  செயலை தாவரத்தை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க இளந்தளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவ்வரை, ஒண் தளிர், அம் குழை, அம் தளிர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்சொன்ன மூன்று தாவரங்களும் CAESALPINIACEAE என்ற ஓரே குடியைச் சார்தவை. ஒரே இயற்கைச் சூழலில் வளருபவை. குறிஞ்சி நிலத்தில் மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில் காணப்படுபவை என்பதைத் தவிர வேறு தொடர்பு இல்லை. ஆகையால் இவை மூன்றும் வெவ்வேறு பிறவியை (Genus) சாரந்தத் தாரவரங்கள் என்பதில் சந்தேகமில்லை. 
            ஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்ற கண்ணோட்டத்தில் சங்கஇலக்கியம்,,காப்பியங்கள்,பக்தி இலக்கியம்
பிற்கால இலக்கியங்கள்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
     இதன் அடிப்படையில் இம்மூன்றும் வெவ்வேறானவை எனக்கருத  இடமுண்டு.
                  இம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம்  காணப்பட்டது தவறென்றும்அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேனாள்  தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.


No comments:

Post a Comment