செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Sunday, 13 March 2016

சிறுதானியத் தாவரங்கள்'–நூல் அறிமுகம்

சிறுதானியங்கள்'
நூல் அறிமுகம்

'தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் வரிசையல் – சிறுதானியத் தாவரங்கள்'–
பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம்,
பஞ்சவர்ணம் பதிப்பகம்,
காமராஜர் தெரு,
பண்ருட்டி–607 106,
கைப்பேசி : 9965362201, 9842334123;
பக்கம்  496,
விலை ரூ.400/-.' 
சிறுதானிய மோகமும் சிறப்பான நூலும்
அண்மைக்காலமாக மக்களின்  பார்வை 'millets' என்று சொல்லக்கூடிய சிறுதானியங்களின் மீது திரும்பியுள்ளது; சிறுதானியங்களுக்கான மோகம் கூடியுள்ளது. சிறுதானியங்களை  விற்பனை செய்வதற்கென்று தனிக்கடைகளும், சிறுதானிய உணவுவகைகளை  வழங்குவதற்கென்று தனி உணவகங்களும் ஊர்தோறும்நாள்தோறும்  பெருகியவண்ணம் உள்ளன. இந்தச் சூழலில், பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்களின்  சிறுதானியத் தாவரங்கள்' என்னும் இந்நூலின் வரவு சிறுதானியங்கள் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தரவுகளையும் அறிந்துகொள்வதற்கானதோர் அரிய வாய்ப்பாக  உள்ளது.
தாவரமும் நூலும்
தமிழிலக்கியம், ஆன்மீகம், தாவரம்ஆகிய முப்பொருள்களையும், அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் ஆய்ந்து வரும்  பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்கள், அவ்வாய்வின் பயனாக, இதுகாறும் பிரபஞ்சமும் தாவரங்களும், குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், தொல்காப்பியத் தாவரங்கள், திருமந்திரத் தாவரங்கள்போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளார். இதனிடையே 'ஒரு தாவரத்திற்கு ஒரு நூல்' என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அந்த வரிசையில் முதலாவதாக 'அரசமரம்' என்னும்  நூலை வெளியிட்டார்; இப்பொழுது கம்பு முதலாகிய  எண்வகைச் சிறுதானியங்களுக்கும் சேர்த்து ஒரே நூலாகச் 'சிறுதானியத் தாவரங்கள்' என்னும் இந்த நூலை வெளியிட்டுள்ளார்; கரும்பு, பனைபோன்ற  தாவரங்களுக்கான நூல்கள் அச்சில் உள்ளதாகத் தெரியவருகிறது.
தானியங்களும் சிறுதானியங்களும்
புன்செய் நிலங்களில், வறட்சியைத் தாங்கி, பெரும்பாலும் மானாவாரியாக விளையக்கூடிய 'கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, பனிவரகு, சோளம், தினை, வரகு' –  ஆகிய  தானியங்கள் உருவத்தில் சிறியனவாக இருப்பதால் 'சிறுதானியங்கள்' (small grains / millets) அல்லது  'குறுதானியங்கள்'  (minor millets) என்று வழங்கப்படுவதாகவும், நன்செய் நிலங்களில் பெரும்பாலும் நீராதாரத்துடன்பாசன வசதியுடன் விளையக்கூடிய நெல், கோதுமை, பார்லி, ஓட்ஸ், மக்காச்சோளம்போன்றவை உருவத்தில் சற்றே பெரியதாக உள்ளதால்  'தானியங்கள்' (பெருந்தானியங்கள்) என்று வழங்கப்படுவதாகவும் நூலாசிரியர் இருவகைத் தானியங்களுக்கான  அடிப்படை வேறுபாட்டினைத் தெளிவாகக் குறித்துச் செல்கிறார்.
நூலும் செய்தியும்
சிறுதானிய உற்பத்தியில்உலகில் முதல் இருபது இடங்களைப் பிடித்துள்ள  நாடுகளின் பட்டியலையும், அவை உற்பத்தி செய்யும் சிறுதானியங்களின் அளவையும்  ஆசிரியர் நூலில் குறித்துள்ளார்; ஒவ்வொரு சிறுதானியத்திலும் உள்ள உயிர்ச்சத்துகள், ஊட்டச் சத்துகள், தாதுப்பொருள்கள் போன்றவற்றைத் தொகுத்துத் தருவதுடன், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற  ஏனைய  தானியங்களிலுள்ள  சத்துகளோடு ஒப்பிட்டும் காட்டுகிறார்; சிறுதானியங்கள் மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தன்மையையும், விலங்குபறவையினங்களுக்கு  உணவாகும் தன்மையையும், சிறுதானியங்களின் பிற பயன்பாடுகளையும்  விரிவாக விளக்கிச்செல்கிறார்.
பெயர்களும் இரகங்களும்
சிறுதானியங்களின் வேறு தமிழ்ப்பெயர்கள், சித்த மருத்துவத் தொகைப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள், ஆங்கிலத்தில் வழங்கும் பெயர்கள், தாவரவியற்பெயர்கள்போன்றவற்றைத் தெளிவாகக் குறித்துச்செல்லும் ஆசிரியர், ஒவ்வொரு சிறுதானியத்திலும் உள்ள  பிற இரகங்களையும் (other variety / species) சுட்டிக்காட்டத் தவறவில்லை. எடுத்துக்காட்டாகக் 'கம்பு' என்னும்  சிறுதானியத்தின் இதர இரகங்களாக உள்ளுறைக்கம்பு, கீழ்த்திசைக்கம்பு, சிறுமலர்க் காம்புக்கம்பு, சுருள்முடிக்கம்பு, பிரிந்த கம்பு, முன்ஜா கம்புபோன்றவற்றைச் சுட்டுவதைச் சொல்லலாம்.
இலக்கியமும் சிறுதானியமும்
சங்ககாலபக்தி இலக்கியகாலஇடைக்காலஇக்கால இலக்கியங்களில், நாட்டுப்புறப் பாடல்களில், விடுகதைகளில், பழமொழிகளில் சிறுதானியங்களின் பதிவுகளைக் கண்டறிந்து, தொகுத்துப் பாடலடிகளோடு தருகிற ஆசிரியரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், ஆர்வமும், முயற்சியும், உழைப்பும் வெகுவாகப் பாராட்டத்தக்கன. தமிழ் தெரியாதவர்களும் பயன்கொள்ளும் வகையில்  'Wealth of India'இல் தரப்பட்டுள்ள சிறுதானியங்கள் பற்றிய  செய்திகளும் தரவுகளும் மொழிமாற்றாமல், ஆங்காங்கே ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன.
சிறுதானியங்களும் உணவுவகைகளும்
சிறுதானியங்களைக் கொண்டு அக்காரஅடிசில், அதிரசம், கேசரி, கொழுக்கட்டை, அல்வா, லட்டுபோன்ற இனிப்பு வகைகளையும், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, கிச்சடி, அடை, இடியாப்பம்போன்ற சிற்றுண்டி வகைகளையும், தட்டை, பாப்கார்ன், முறுக்கு, பொரி, சீடை, பக்கோடா போன்ற நொறுக்குத்தீனி வகைகளையும், கஞ்சி, சூப், கீர், கூழ், பாயசம், பானம்போன்ற திரவ  உணவு வகைகளையும், இஞ்சி சாதம், எள் சாதம், சீரக சாதம், வெங்காய சாதம், வெந்தய சாதம்போன்ற சாத வகைகளையும்  செய்யும் முறைகளை  விரிவாகவும் தனித்தனியாகவும் சற்றேறக்குறைய 160 பக்கங்களில்  கூறிச்செல்கிறார் ஆசிரியர்.
உணவும் நஞ்சும்
சிறுதானியங்களால் ஏற்படும் நன்மைகளையெல்லாம் தொகுத்துக்கூறும் நூலாசிரியர், சற்றுக்  கவனக்குறைவாக இருந்தால் உணவே நஞ்சாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லைஎடுத்துக்காட்டாக, வரகுக்கு ஏழடுக்கு மேல்தோல் போர்வைப்பாதுகாப்பு உண்டென்றும்,  ஏழாவது அடுக்காக  மெல்லிய சயனைட் கலந்த  பூஞ்சானம் இருக்குமென்றும், அதனைக் களையாமல்  உண்டால் உடலுக்கு நஞ்சாகும் என்றும், நன்கு தீட்டப்பட்டமேல் தோலடுக்கு அனைத்தும் நீக்கப்பட்ட வரகைப் புளித்த மோரோடும் கத்திரிக்காய் வாட்டலோடும் உண்டால் நச்சுத்தன்மை நீங்கி, உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் விரிவாகக் கூறிச்செல்கிறார். இதன் மூலம் சிறுதானியங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்னும் குறிப்பையும் நமக்கு நூலாசிரியர் தருகிறார்.
நூலும் நூலாசிரியரும்
சிறுதானியங்கள் குறித்த தாவரவியற்செய்திகள், இலக்கியச்செய்திகள், மருத்துவச் செய்திகள், பயன்பாட்டுச்செய்திகள், உணவுவகைச்செய்திகள்என அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியதோர் ஒப்பற்ற கலைக்களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பயன்மிகுந்தஒப்பற்ற நூல் இது என்று சொன்னால், அது மிகையில்லை.
இலக்கியம்தாவரம்ஆன்மீகம் ஆகியவற்றைத் தொடர்புறுத்தி, அணுகியும் நுணுகியும்  ஆய்ந்து, அரிய பல நூல்களைத் தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்துவரும் அறிஞர் பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்களை 'அரிமா நோக்கு' ஆய்விதழ் மனமாரப் பாராட்டுவதோடு, இதுபோலும் இன்னும் பல நூல்களைப் படைத்தளிக்குமாறும் வேண்டுகிறது.

மருதூரார்

No comments:

Post a Comment